கர்நாடக மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியை பா.ஜனதாவில் சேர்க்க மேலிடம் முடிவு
ஜனதாதளம் கட்சியை சேர்ந்த மேல்சபை தலைவரான பசவராஜ் ஹொரட்டியை பா.ஜனதாவில் சேர்க்க மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும், அவரை மேற்கு ஆசிரியர் தொகுதி வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
பெங்களூரு:
ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த மேல்-சபை தலைவரான பசவராஜ் ஹொரட்டியை பா.ஜனதாவில் சேர்க்க மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும், அவரை மேற்கு ஆசிரியர் தொகுதி வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேல்-சபை தலைவர்
கர்நாடக மேல்-சபை தலைவராக இருந்து வருபவர் பசவராஜ் ஹொரட்டி. இவர், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். தற்போது மேல்-சபையில் பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
இந்த நிலையில், மேல்-சபை தலைவராக உள்ள பசவராஜ் ஹொரட்டியை பா.ஜனதாவுக்குள் இழுக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தது. அவரும், ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர முடிவு செய்திருந்ததாகவும் தெரிகிறது.
இதற்கிடையில், கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 4 தொகுதிகளில், மேற்கு ஆசிரியர் தொகுதியை தவிர மற்ற 3 தொகுதிகளிலும் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களின் பட்டியலை நேற்று முன்தினம் பா.ஜனதா மேலிடம் வெளியிட்டு இருந்தது. ஆனால் மேற்கு ஆசிரியர் தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படவில்லை.
பா.ஜனதா மேலிடம் அனுமதி
அந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக, பா.ஜனதாவை சேர்ந்த மோகன் லிம்பேகாய் பெயரை கர்நாடக பா.ஜனதா தலைவர்கள், மேலிடத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர். ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக விரைவில் பா.ஜனதாவில் சேர இருக்கும் மேல்-சபை தலைவரான பசவராஜ் ஹொரட்டிக்கு வழங்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக தான் மோகன் லிம்பேகாய்க்கு சீட் வழங்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
அதாவது பசவராஜ் ஹொரட்டியை பா.ஜனதாவில் சேர்க்க மேலிட தலைவர்கள் அனுமதி வழங்கி இருப்பதாகவும், அத்துடன் விரைவில் நடைபெற உள்ள மேற்கு ஆசிரியர் தொகுதிக்கான தேர்தலில் பசவராஜ் ஹொரட்டியை பா.ஜனதா சார்பில் வேட்பாளராக நிறுத்தவும் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் பசவராஜ் ஹொரட்டி ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர இருப்பது உறுதியாகி உள்ளது.
Related Tags :
Next Story