சேலத்தில் மக்கள் நீதிமன்றம்: 6,452 வழக்குகளுக்கு சமரச தீர்வு


சேலத்தில் மக்கள் நீதிமன்றம்: 6,452 வழக்குகளுக்கு சமரச தீர்வு
x
தினத்தந்தி 13 March 2022 3:50 AM IST (Updated: 13 March 2022 3:50 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 6 ஆயிரத்து 452 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டன.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 6 ஆயிரத்து 452 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டன.
மக்கள் நீதிமன்றம்
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் நீதிமன்றம் நடத்தப்படவில்லை.
இந்தநிலையில், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து மீண்டும் அனைத்து கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஆபிரகாம் லிங்கன், தொழிலாளர் நல நீதிபதி முனுசாமி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான தங்கராஜ் உள்பட அனைத்து கூடுதல் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகள் மற்றும் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.
சமரச தீர்வு
சேலம், ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி என மாவட்டம் முழுவதும் மோட்டார் வாகன விபத்து, சிவில், நில அபகரிப்பு, வங்கி காசோலை, குடும்ப நலம் என பல்வேறு வழக்குகளில் இருந்து நேற்று ஒரேநாளில் 11 ஆயிரத்து 464 வழக்குகள் சமரசத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மாவட்டம் முழுவதும் 20 அமர்வுகளில் வழக்குகள் விசாரிக்கப்பட்டது. முடிவில் 6 ஆயிரத்து 452 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.59 கோடியே 6 லட்சத்து 61 ஆயிரத்து 873-க்கு பைசல் செய்து தீர்வு காணப்பட்டது.
சேலத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை வழக்கில் தனம் (வயது 90) என்ற மூதாட்டி சமரசத்துக்கு வந்தார். அவர் 1978-ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்து சுமார் 44 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து தற்போது மக்கள் நீதிமன்றம் மூலம் சமரச பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் தனம் மற்றும் அவரது சகோதர, சகோதரிகள் ஒற்றுமையுடன் புறப்பட்டு சென்றனர்.

Next Story