தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,755 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,755 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 13 March 2022 5:26 AM IST (Updated: 13 March 2022 5:26 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 9 இடங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,755 வழக்குகளில் ரூ.19.38 கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

தென்காசி:
புதுடெல்லி தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி கோர்ட்டுகளில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 9 தாலுகாக்களில் 22 அமர்வுகளுடன் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நெல்லை கோர்ட்டு வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான நசீர் அகமது தொடங்கி வைத்தார்.

நிரந்தர மக்கள் கோர்ட்டு நீதிபதி சமீனா, 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி தீபா, குடும்ப நல கோர்ட்டு நீதிபதி குமரேசன், மகளிர் கோர்ட்டு நீதிபதி விஜயகுமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் (பொறுப்பு) அமிர்தவேலு, கூடுதல் சார்பு நீதிபதி இசக்கியப்பன், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு கோர்ட்டு நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் (பொறுப்பு) பிஸ்மிதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப்பையா, மாஜிஸ்திரேட்டுகள் அருண்குமார், ராஜேஷ்குமார், கடற்கரை செல்வம், விஜயலட்சுமி, ஜெயகணேஷ், ஓய்வுபெற்ற நீதிபதி முருகையா, வக்கீல்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி டாக்டர் பழனிகுமார் ஆகியோர் முன்னிலையில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

இதில் கோர்ட்டுகளில் நிலுவையில் இருந்த மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரசமாக முடிக்கக்கூடிய குற்ற வழக்குகள் உள்பட மொத்தம் 6,823 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 4,558 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.17 கோடியே 34 லட்சம் சமரச தொகைக்கு முடிக்கப்பட்டது.

மேலும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படாத தாவாக்களாகிய வங்கி கடன் வழக்குகள் மொத்தம் 197 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அவை முடிக்கப்பட்டது. அதில் ரூ.2 கோடியே 4 லட்சம் சமரச தொகைக்கு முடிக்கப்பட்டது. மொத்தம் 4,755 வழக்குகளில் ரூ.19 கோடியே 38 லட்சத்துக்கு சமரச தீர்வு காணப்பட்டது. ஏற்பாடுகளை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு கோர்ட்டு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளருமான (பொறுப்பு) பிஸ்மிதா செய்திருந்தார்.

Next Story