ஆலங்குளம் அருகே கைக்குழந்தை திடீர் சாவு
ஆலங்குளம் அருகே கைக்குழந்தை திடீரென இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 28). இவருடைய மனைவி சீதாலட்சுமி (24). இவர்கள் சென்னையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சீதாலட்சுமி கடந்த மாதம் குருவன்கோட்டைக்கு வந்தார். அவருக்கு 24 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
நேற்று முன்தினம் குழந்தையுடன் தாய் இருந்தபோது, திடீரென்று குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளது. உடனே குழந்தையை ஆலங்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியதால், குழந்தையை ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்ததாகவும், நெற்றியில் காயம் இருந்ததாகவும் மருத்துவர்கள் ஆலங்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து குழந்தையின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக ராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story