கடையநல்லூரில் பா.ஜனதாவினர் சாலை மறியல
கடையநல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் யூனியன் நெடுவயல் பஞ்சாயத்து செயலாளர் கணபதியை பணி செய்யவிடாமல் தடுத்து இடையூறு செய்ததாக, பஞ்சாயத்து தலைவரும், பா.ஜனதா பிரமுகருமான முப்பிடாதி, அவருடைய மகன் மாரியப்பன் ஆகிய 2 பேர் மீது அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக முப்பிடாதி மற்றும் பா.ஜனதாவினர் நேற்று முன்தினம் கடையநல்லூர் யூனியன் அலுவலகத்தில் முறையிட சென்றபோது, அங்கு வந்த தி.மு.க.வினருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் 4 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில், இரு தரப்பைச் சேர்ந்த தலா 4 பேர் மீது கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் பா.ஜனதாவினரை தாக்கிய தி.மு.க.வினரை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று கடையநல்லூர் யூனியன் அலுவலகம் முன்பு பா.ஜனதாவினர் திரண்டு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் தென்காசி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
உடனே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன், இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், வேல்கனி மற்றும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பா.ஜனதாவினர் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுதொடர்பாக பா.ஜனதாவினர் 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பா.ஜனதாவினர் சாலைமறியலில் ஈடுபட்டபோது அந்த வழியாக சென்ற தி.மு.க. பிரமுகரின் கார் மீது சிலர் கல் வீசினர். இதில் காரின் கண்ணாடி நொறுங்கியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story