போதை பொருள் விற்பனை கும்பலை கைது செய்த போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு
போதை பொருள் விற்பனை கும்பலை கைது செய்த துணை கமிஷனர், தனிப்படை போலீசாரை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் வரவழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
ஆந்திராவில் இருந்து மெத்தம்பெடமைன் என்ற போதை பொருளை வாங்கி வந்து, அதனை சென்னையில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்த 8 பேர் கும்பலை வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் (பொறுப்பு) சுந்தரவதனம் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த நிலையில் துணை கமிஷனர் சுந்தரவதனம் மற்றும் இணை கமிஷனர் ரம்யா பாரதியின் தனிப்படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் எம்.முகமது புஹாரி, விஜய், காதர் மீரா, செல்வக்குமார், தலைமை போலீஸ்காரர்கள் கிருஷ்ணன், முகமது யாகியா, மனுவேல், சரவணன், அசோக், ஷோபா, போலீஸ்காரர்கள் பாலமுரளி, சதாசிவம், செந்தில்குமார், முகமது காட்டுபாவா, முத்துக்குமரன், ஊர்காவல் படை வீரர் சரத்குமார் ஆகியோரை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் வரவழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர் 4-வது தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நசீர் (வயது 44) சவாரி சென்ற போது, புழல் கதிர்வேடு பைபாஸ் மேம்பாலத்தின் கீழ் ரூ.6,133 பணத்துடன் கிடந்த பையை எடுத்து நேர்மையாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவருக்கும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
சென்னை போலீஸ்துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீசாரில் மாதந்தோறும் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு ரூ.5 ஆயிரத்துடன் ‘நட்சத்திர போலீஸ் விருது’ வழங்கப்படுகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்துக்கான ‘நட்சத்திர போலீஸ் விருது’ சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜி.தியாகராஜனுக்கு கிடைத்தது. இவர், போலியான ஆவணங்கள் மூலம் ரூ.2.2 கோடி வீட்டு கடன் பெற்று மோசடி செய்த குற்றவாளியை கைது செய்வதற்கு உறுதுணையாக இருந்ததால் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story