‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மின் இணைப்பு பெட்டி சரி செய்யப்பட்டது
சென்னை நுங்கம்பாக்கம் ஜெகன்நாதன் மெயின் ரோட்டில் உள்ள மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் இருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து ஆய்வு மேற்கொண்ட மின்வாரிய அதிகாரிகள் புதிய கதவு அமைத்து மின் இணைப்பு பெட்டியை சரி செய்துள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடி நடவடிக்கை எடுத்த மின்வாரியத்துக்கும் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் பாராட்டை தெரிவித்தனர்.
குழியை மூட நடவடிக்கை எடுக்கப்படுமா?
சென்னை தியாகராயநகர் ராமநாதன் தெருவில் 4 மாதங்களுக்கு முன்பு மழைநீர் கால்வாய்க்காக குழிதோண்டப்பட்டது. இன்று வரை இந்த குழி மூடப்படாமல் இருக்கிறது. மேலும் தினந்தோறும் இந்த குழியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குழியை மூட நடவடிக்கை எடுப்பார்களா?
- பிரபு, தியாகராயநகர்.
தெருவில் தேங்கும் கழிவுநீர்
காஞ்சீபுரம் மாவட்டம் புத்தேரி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் நிரம்பி தெருவில் ஓடுவதால் தெருமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும் தெருவில் செல்லும் கழிவுநீர் ஒரே இடத்தில் தங்கிவிடுவதால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டுக்கும் வழிவகுக்கிறது. எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஸ்டீபன், புத்தேரி.
அகற்றப்படாத குப்பைகள்
சென்னை திருவான்மியூர் நேதாஜி நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகே உள்ள இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் குப்பைகள் அதிகம் சேர்ந்து அந்த பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே குப்பைகளை அகற்றுவதற்கும் மேலும் இந்த பகுதியில் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுவதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள்.
பாதாள சாக்கடை மூடி சேதம்
சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வெங்கடாச்சலம் தெருவில் உள்ள நடைபாதையில் இருக்கும் பாதாள சாக்கடை மூடி முழுவதும் உடைந்துள்ளது. இதனால் அந்த நடைபாதை வழியே நடந்து செல்லும் பாதசாரிகள் தவறி விழும் அபாயம் உள்ளது. இப்போது தற்காலிகமாக ஒரு டயரை வைத்து அடைத்து வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.
- இதயகனி, மயிலாப்பூர்
திறந்து கிடக்கும் வடிகால்வாய்கள்
சென்னை துரைப்பாக்கம் ஒக்கியம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியம் கண்ணகி தெருவில் ஆங்காங்கே உள்ள கழிவுநீர் வடிகால்வாய்களில் சில மூடிகள் இல்லாமலும், பாதி உடைந்த நிலையிலும் இருக்கின்றன. மேலும் சிலவற்றை அட்டையை கொண்டு தற்காலிகமாக மூடி வைத்துள்ளனர். இதுபோன்ற திறந்த நிலையில் இருக்கும் வடிகால்வாய்களில் யாரும் தவறி விழும் முன்பு மாநகராட்சி ஊழியர்கள் வடிகால்வாய்களை மூடுவதற்கு வழி செய்ய வேண்டும்.
- கணேஷ், துரைப்பாக்கம்.
ஆபத்தான மின்கம்பம்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கொடி வலசா பகுதியில் உள்ள அத்திமாஞ்சேரி பேட்டை கவரைத் தெருவில் உள்ள மின்கம்பம் பாதி உடைந்தவாறு ஆபத்தான நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் உடைந்து கீழே விழும் சூழலில் மின்கம்பம் இருப்பதால் இப்பகுதி மக்கள் அதன் அருகில் செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே மின்வாரியம் விரைந்து சரி செய்து தர வேண்டும்.
- குமார், பள்ளிப்பட்டு.
இயங்காத போக்குவரத்து சிக்னல்கள்
காஞ்சீபுரம் மாவட்டம் மவுண்ட் பூந்தமல்லி ரோடு மற்றும் முகலிவாக்கம் மெயின் ரோடு சந்திக்கும் இடத்தில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் கடந்த ஒரு ஆண்டாக இயங்காமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், பொதுமக்கள் சாலையை கடக்க வெகு நேரமாகின்றது. சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் இதை கவனிப்பார்களா?
-தியாகராஜா, காஞ்சீபுரம்.
கூடுதல் நேர பஸ் வசதி தேவை
சென்னை தியாகராயநகரில் இருந்து மாம்பாக்கம் வழியாக குளத்தூருக்கு செல்லும் பஸ் (தடம் எண்: எம்.51வி) தினமும் 1 மணி நேர இடைவெளியில் வந்து கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக 3 மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டும் தான் இந்த பேருந்து இயக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளும், பயணிகளும் நெடுநேரம் பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் நிலையுள்ளது. எனவே மாநகராட்சி போக்குவரத்து கழகம் ஆய்வு செய்து சீரான இடைவெளியில் இவ்வழியே பஸ் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- பயணிகள்.
சேதமடைந்த மின்கம்பம் சரி செய்யப்படுமா?
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரம் பதுவஞ்சோி சடையப்பா் கோவில் முதல் குறுக்குத் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. சிமெண்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவு ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. என்வே விபரீதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை சரி செய்ய மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பன்னீர்செல்வம், சமூக ஆர்வலர்.
Related Tags :
Next Story