தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 13 March 2022 7:19 PM IST (Updated: 13 March 2022 7:19 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி பொதுமக்கள் குறைகள் பற்றிய பகுதி

உயர்கோபுர மின் விளக்கு எரியவில்லை

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் குனிச்சி கிராமத்தில் அரசு மருத்துவமனை அருகில் உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. அந்த மின் விளக்கு எரிந்தால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கும், நோயாளிகளுக்கும் பயன் உள்ளதாக இருக்கும். ஆனால் 2 மாதமாக உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின் விளக்கை எரியவிட வேண்டும்.
-கே.எல்.அரி, குனிச்சி. 
சேதமடைந்த மின்கம்பம்

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை கீழாண்டவீதி போகும் வழியில் பச்சையம்மன் கோவில், அரிசி ஆலை அருகில் ஒரு மின் கம்பம் ஒன்று உள்ளது. அது விரிசல் ஏற்பட்டு வலுவிழந்து காணப்படுகிறது. எந்நேரமும் கீழே விழலாம் என்ற அச்சம் உள்ளது. சேதம் அடைந்த கம்பத்தை மாற்றி விட்டு புதிய கம்பம் நட வேண்டும்.
-எஸ்.குமார், லாலாப்பேட்டை.

குடிநீர் குழாய் உடைப்பு

வேலூர் வள்ளலார் பகுதியில் பகுதி 1-ல் 11-வது தெரு உள்ளது. இங்கு தெருவின் நடுப்பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தொடர்ந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. குழாய் உடைப்பை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜெகதீஸ்வரன், வேலூர்.

 மீண்டும் சேதம் அடைந்த மின்கம்பம்

ஊசூரில் இருந்து அணைக்கட்டு செல்லும் வழியில் தார்வழி சாலை பகுதி உள்ளது. இங்கு மாடு விடும் விழா நடத்தும் தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்று, அடிப்பாகம் சேதம் அடைந்ததை சிமெண்ட் மற்றும் ஜல்லி கற்கள் மூலம் பூசப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் கம்பத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மின்கம்பத்தை மீண்டும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பத்மநாபன், ஊசூர்.

 சாலை அமைக்கும் முன்பு நடவடிக்கை எடுப்பார்களா?

சத்துவாச்சாரி அருகே ரங்காபுரத்தில் அரி ஓம் 1-வது தெரு உள்ளது. இங்கு பாதாள சாக்கடை பணி முடிக்கும் தருவாயில், சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் தெருவில் நடுப்பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பெருமளவு தண்ணீர் தொடர்ந்து வீணாகி கொண்டே உள்ளது. சாலை அமைக்கும் முன்பு குழாய் உடைப்பை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராமச்சந்திரன், வேலூர்.

சாலையை சீரமைக்க வேண்டும்

காட்பாடி ஓடை பிள்ளையார்கோவில் அருகே மதிநகர் செல்லும் சாலை போக்குவரத்து மிகுந்த சாலை ஆகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக தண்ணீர் சூழ்ந்து அந்த சாலையில் சேதம் ஏற்பட்டது. மழைநீரை வடிய வைப்பதற்காக சாலை ஓரம் கால்வாயை தூர்வாரினார்கள். அதில் சாலையும் சேதம் அடைந்தது. சாலையை சீரமைக்க இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தூர்வாரியதை இன்னும் அப்புறப்படுத்தவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திருமலைராஜன், வேலூர்.

 கழிப்பிடம் மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?

திருப்பத்தூர் டவுன் 23-வது வார்டு பெரிய ஏரி அருகே காயிதே மில்லத் நகர் பகுதியில் நகராட்சி சார்பில் ரூ.10 லட்சத்தில் கழிப்பிடம் கட்டப்பட்டது. அது, உபயோகமின்றி இருந்தது. அங்கு பலர் மதுகுடித்தல், சூதாடுவது, கஞ்சா விற்பனை போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கழிப்பிடமும் சேதம் அடைந்துள்ளது. கழிப்பிடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-வெங்கடேசன், திருப்பத்தூர்.

மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு

வேலூர் நகரில் முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவது வாடிக்கையாகி வருகிறது. கிரீன் சர்க்கிள் பகுதியில் வாகனங்கள் செல்லும்போது மாடுகள் அடிக்கடி குறுக்காக செல்கின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சில நேரங்களில் விபத்துகளும் நடக்கின்றன. மாடுகளை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகன்ராஜ், ேவலூர்.

Next Story