தொலைபேசி ஒட்டு கேட்பு வழக்கில் தேவேந்திர பட்னாவிசிடம் போலீசார் 2 மணி நேரம் விசாரணை
தொலைபேசி ஒட்டு கேட்பு வழக்கு தொடர்பாக பா.ஜனதா முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் மும்பை போலீசார் 2 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
மும்பை,
தொலைபேசி ஒட்டு கேட்பு வழக்கு தொடர்பாக பா.ஜனதா முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் மும்பை போலீசார் 2 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
தொலைபேசி ஒட்டு கேட்பு
மராட்டிய போலீஸ் துறை இடமாற்றத்தில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக உளவுப்பிரிவு தலைவராக இருந்த ஐ.பி.எஸ். பெண் அதிகாரி ராஷ்மி சுக்லா தொலைபேசி அழைப்புகளை ஒட்டுகேட்டு, அது தொடர்பான கடிதத்தை டி.ஜி.பி.க்கு அனுப்பினார். ராஷ்மி சுக்லா அனுப்பிய இந்த கடிதத்தை கடந்த ஆண்டு பா.ஜனதா முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்தநிலையில் சட்டவிரோதமாக தொலைபேசி ஒட்டு கேட்டதாகவும், அரசின் ரகசியங்களை கசிய விட்டதாகவும் ஐ.பி.எஸ். அதிகாரி ராஷ்மி சுக்லா மீது சமீபத்தில் மராட்டிய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பட்னாவிசிடம் அதிரடி விசாரணை
இந்தநிலையில் அதிரடி திருப்பமாக இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்பை பி.கே.சி. சைபர் கிரைம் போலீசார் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதில் விசாரணைக்கு போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி கூறப்பட்டு இருந்தது.
ஆனால் நேற்று போலீசாரே நேரடியாக தேவேந்திர பட்னாவிசை சந்தித்து விசாரணை நடத்தினர். இதற்காக அவர் வசித்து வரும் தென்மும்பையில் உள்ள அரசு பங்களாவான ‘சாகர்’ சென்றனர். போலீஸ் துணை கமிஷனர் ஹேம்ராஜ் சிங் ராஜ்புத், உதவி கமிஷனர் நிதின் ஜாதவ் மற்றும் 2 சீனியர் இன்ஸ்பெக்டர்கள் சென்று இருந்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக தேவேந்திர பட்னாவிசிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, பல்வேறு கேள்விகளை எழுப்பி அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். பின்னர் போலீஸ் அதிகாரிகள் அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர்.
இணை குற்றவாளி
இதையடுத்து தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களிடம் கூறுகையில், “போலீசார் என்னிடம் கேட்ட கேள்விகள் அனைத்தும் தொலைபேசி ஒட்டுகேட்பு மற்றும் ரகசியங்களை கசிய விட்ட வழக்கில் என்னை இணை குற்றவாளியாக சித்தரிப்பது போல இருந்தது. போலீஸ் இடமாற்றத்தில் நடந்த மிகப்பெரிய ஊழல் தொடர்பாக மத்திய உள்துறை செயலாளரின் கவனத்துக்கு தான் கொண்டு சென்றேன்.
பொதுவெளியில் எதையும் வெளியிடவில்லை. ஊழலை அம்பலப்படுத்தியதற்காக பழிவாங்கும் நோக்கில் மராட்டிய கூட்டணி அரசு செயல்படுகிறது. ஆனால் அவர்களின் நோக்கம் எதுவும் நிறைவேறாது” என்றார்.
பலத்த பாதுகாப்பு
முன்னதாக தேவேந்திர பட்னாவிஸ் வீட்டுக்கு போலீசார் வந்து வாக்குமூலம் பதிவு செய்தபோது நிதேஷ் ரானே உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் அவரின் வீட்டின் வெளியே திரண்டனர். இதேபோல தொண்டர்களும் ஏராளமானோர் குவிந்தனர்.
எனவே அசம்பாவிதங்களை தவிர்க்க தேவேந்திர பட்னாவிஸ் வீட்டின் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதேபோல தேவேந்திர பட்னாவிடம் போலீசார் நடத்திய விசாரணைக்கு எதிராக பா.ஜனதாவினர் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.
-----------------
Related Tags :
Next Story