தென்காசி மாவட்டத்தில் இளையரசனேந்தல் பிர்க்காவை இணைக்கும் திட்டத்தை கைவிட கோரிக்கை
இளையரசனேந்தல் பிர்க்காவை தென்காசி மாவட்டத்தில் இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று பிர்க்கா உரிமைமீட்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது
கோவில்பட்டி:
இளையரசனேந்தல் பிர்க்காவை தென்காசி மாவட்டத்தில் இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று பிர்க்கா உரிமைமீட்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இளையரசனேந்தல் பிர்க்கா விவகாரம்
நெல்லை மாவட்டத்தில் இருந்த இளையரசனேந்தல் பிர்க்காவிலுள்ள 12 வருவாய் கிராமங்களை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இணைக்கக் கோரி கடந்த 40 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில், 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி சட்டசபையில் இளையரச னேந்தல் பிர்க்காவை கோவில்பட்டி தாலுகா, தூத்துக்குடி மாவட்டத்தில் இணைக்க ஆணை பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து மே 1-ந்தேதி இளையரசனேந்தல் பிர்க்கா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவில் இணைக்கப்பட்டது. அதேசமயம், உள்ளாட்சி, மின்சாரம் ஆகியவற்றை இணைக்க கோரி கடந்த 14 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் இளையரச னேந்தல் பிர்க்காவை தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகாவில் இணைக்க சட்டமன்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் பரிந்துரை செய்யப் பட்டு, அதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் நேற்று இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழுவின் அவசர ஆலோசனை கூட்டம் அப்பனேரி கிராமம் சமுதாய நலகூட மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ரெங்கநாயகலு தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், துணை தலைவர் கற்பூரராஜ், வாழப்பாடி பேரவை மாநில செயலாளர் அய்யலுசாமி, தேசிய விவசாயிகள் சங்க மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராகுல், ஒன்றிய தலைவர் ஜெயக்குமார் மற்றும் ஊர் நாட்டாமைகள் கலந்து கொண்டனர்.
அரசுக்கு கோரிக்கை
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
இளையரசனேந்தல் பிர்காவிலுள்ள 12 பஞ்சாயத்துகள் கோவில்பட்டி தாலுகாவில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரவும், மேற்படி 12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி யூனியனில் இணைக்கவும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இளையரசனேந்தல் பிர்கா மக்களின் கோரிக்கையை ஏற்று, வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் தீர்மானம் நிறைவேற்றி, உடனே இணைக்கப்படாத உள்ளாட்சி துறை, அதன் உடன் இணைந்த தொடக்க கல்வி, மின்சாரத் துறையை கோவில்பட்டி தாலுகா தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும்.
ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் மக்களை திரட்டி சாலை மறியல், உண்ணாவிரதம், மக்கள் உரிமை ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தவும் ஏகமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
பின்னர்சமுதாய நல கூடம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி சிறிது நேரம் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Related Tags :
Next Story