மாயாற்றில் பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்


மாயாற்றில் பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 March 2022 8:48 PM IST (Updated: 13 March 2022 8:48 PM IST)
t-max-icont-min-icon

முதுமலை- மசினகுடி இடையே செல்லும் மாயாற்றில் பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கூடலூர்

முதுமலை- மசினகுடி இடையே செல்லும் மாயாற்றில் பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

பழுதடைந்த பாலம்

முதுமலை புலிகள் காப்பகத்தின் தலைமையிடமான தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி வழியாக ஊட்டிக்கு சாலை செல்கிறது. இதில் தெப்பக் காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு எதிரே மாயார் ஆறு ஓடுகிறது. 

இதன் குறுக்கே ஆங்கிலேயர் கால இரும்பு பாலம் பல ஆண்டுகளாக இருந்தது. இதனால் வாகனப் போக்குவரத்து நடைபெற்று வந்தது. நாளடைவில் பாலம் மிகவும் பழுதடைந்ததால் கனரக வாகனங்கள் இயக்குவதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டது. 

தொடர்ந்து நாளுக்கு நாள் பாலமும் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் புதிய பாலம் கட்ட வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். 

பணி தொடங்கவில்லை

இதைத்தொடர்ந்து ரூ.1 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் பழுதடைந்த பாலம் அகற்றப்பட்டது. பின்னர் முதுமலையில் இருந்து மசினகுடிக்கு செல்லும் வாகனங்கள் வனப் பகுதி வழியாக திருப்பி விடப்பட்டன.

இந்த நிலையில் புதிய பாலம் கட்டும் பணி இதுவரை தொடங்கப்பட வில்லை. தற்போது கோடைகாலம் என்பதால் மாயார் ஆற்றில் தண்ணீர் மிக குறைவாக செல்கிறது. இன்னும் 2 மாதங்கள் கழித்து கூடலூர் பகுதியில் மழைக்காலம் தொடங்க உள்ளது. 

இச்சமயத்தில் மாயாறு உட்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். இதனால் பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

விரைவில் மேற்கொள்ள வேண்டும்

இதை கருத்தில் கொண்டு புதிய பாலம் கட்டுமான பணியை வேகமாக தொடங்க வேண்டும் என மசினகுடி பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பழுதடைந்த பாலத்தை முழுமை யாக உடைத்து விட்டதால் தற்காலிகமாக மாயார் குறுக்கே சாலை அமைக்கப்பட்டு வனப்பகுதி வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டு உள்ளது. 

தற்போது கோடைகாலம் என்பதால் போக்குவரத்து எந்த சிரமமுமின்றி நடைபெறுகிறது. ஆனால் மழை காலத்தில் மாயார் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும். 

அப்போது போக்குவரத்து தடை பட வாய்ப்பு உள்ளது. எனவே பாலம் கட்டுமான பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றனர்.


Next Story