குருசடைதீவு படகு சவாரியில் ஆர்வம் காட்டாத சுற்றுலா பயணிகள்
அதிக கட்டணத்தால் குருசடைதீவு சுற்றுலா படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டாமல் சுற்றுலா பயணிகள் கட்டணத்தை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம்,
அதிக கட்டணத்தால் குருசடைதீவு சுற்றுலா படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டாமல் சுற்றுலா பயணிகள் கட்டணத்தை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடல்வாழ் உயிரினங்கள்
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இந்த 21 தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதியில் டால்பின், கடல் பசு, ஆமை, கடல் குதிரை, பவளப்பாறைகள் உள்ளிட்ட 3,600 வகையான கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
மண்டபம் சரகத்திற்கு உட்பட்ட பாம்பன் குந்துகால் அருகே உள்ள கடல் பகுதியில் குருசடை தீவு மற்றும் சிங்கலிதீவும் உள்ளன. இதில் குருசடை தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் பல வண்ணங்களில் கடலுக்குள் அதிக அளவில் பவளப்பாறைகள் உள்ளதுடன் டால்பின், ஆமை உள்ளிட்ட பல அரிய வகை கடல்வாழ் உயிரினங் களும் அதிகமாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் வனத்துறை மூலம் பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து குருசடைதீவு வரையிலும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக குந்துகால் கடற்கரையில் உள்ள விவேகானந்தர் மணிமண்டபம் கடற்கரை பகுதியில் மரத்தாலான படகு நிறுத்தும் தளம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு 12 பேர் அமர்ந்து பயணம் செய்ய பைபர் படகு ஒன்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை
படகில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு ரூ.400 கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒரு நபருக்கு அதிக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் படகு சவாரியில் ஆர்வம் காட்டாமல் திரும்பிச் செல்கின்றனர்.
மேலும் முக்கிய இடங்களில் படகு போக்குவரத்து குறித்த தகவல் பலகை வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரிகள் குருசடை தீவு வரையிலும் தொடங்கப்பட்டுள்ள இந்த படகு போக்குவரத்தில் பயணிகளின் கட்டணத்தை குறைத்து பல்வேறு இடங்களில் இதுகுறித்த தகவல் பலகைகளை வைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story