கோடை காலம் தொடங்கியது ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்
கோடை காலம் தொடங்கியதால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்தும் காவிரி ஆற்றில் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.
பென்னாகரம்:
கோடை காலம் தொடங்கியதால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்தும், காவிரி ஆற்றில் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள்
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து காவிரி ஆறு மற்றும் மெயின் அருவியில் குளித்து செல்வார்கள்.
இந்த நிலையில் கோடை காலம் தொடங்கியதால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ், காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
விற்பனை படுஜோர்
தொடர்ந்து சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் நின்றவாறு அருவியின் அழகை கண்டு ரசித்தனர். முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா, மீன் அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். கோடைவெயில் கொளுத்திய போதிலும் நடைபாதையில் சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக காணப்பட்டனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், உணவகங்களில் விற்பனை படுஜோராக நடைபெற்றது. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஆலம்பாடி, மணல்திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.
Related Tags :
Next Story