கோவை காவலர் குடியிருப்பில் நகை, பணம் திருடிய முன்னாள் போலீஸ்காரர் கைது
உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கோவை காவலர் குடியிருப்பில் புகுந்து நகை, பணம் திருடிய முன்னாள் போலீஸ்காரரை போலீசார் கைதுசெய்தனர்.
கோவை
உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கோவை காவலர் குடியிருப்பில் புகுந்து நகை, பணம் திருடிய முன்னாள் போலீஸ்காரரை போலீசார் கைதுசெய்தனர்.
காவலர் குடியிருப்பில் திருட்டு
கோவை அவினாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதான வளாகத்தில் காவலர் குடியிருப்பு உள்ளது. இங்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மர்ம ஆசாமி ஒருவர் பூட்டி இருந்த 4 வீடுகளை நோட்டமிட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணம் மற்றும் லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் வின்சென்ட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் மர்ம ஆசாமியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் கைவரிசை காட்டிய கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்த செந்தில்குமார் (வயது47) என்பவரை கிருஷ்ணகிரி ஊத்தங்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
பணியில் இருந்து நீக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், செந்தில்குமார் போலீஸ்காரராக பணியாற்றி வந்ததும், கடந்த 2009-ம் ஆண்டில் பணியில் இருந்த போது இன்ஸ்பெக்டர் ஒருவரை பழிவாங்கும் நோக்கில், ஆயுதப்படை வாகனத்தை கடத்தி சென்று ஏரியில் தள்ளிவிட்ட வழக்கில் கைதாகி, பணியில் இருந்து நீக்கப்பட்டு்ள்ளார்.
பின்னர் அவர். ஜாமீனில் வெளியே வந்து லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் ஓட்டிச்சென்ற லாரி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் அந்த வேலையும் அவருக்கு பறிபோனது.
இதனை தொடர்ந்து தான் செந்தில்குமார் பணத்துக்காக போலீசாரின் வீடுகளை நோட்டமிட்டு தன்னை போலீசார் என்று கூறி பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டத்தொடங்கினார். இதில் தற்போது கிருஷ்ணகிரியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் கைவரிசை காட்டியபோது ஊத்தங்கரை போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி போட்டு விசாரணை நடத்திய போது, கோவை காவலர் குடியிருப்பில் நகை, பணம் திருடிச்சென்றது தெரியவந்தது.
உல்லாச வாழ்க்கை
இதையடுத்து ஊத்தங்கரை போலீசார் கோவை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கோவை தனிப்படைபோலீசார் அங்கு சென்று, செந்தில்குமாரை காவலில் எடுத்து கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோவை போலீ்ஸ் குடியிருப்பில் திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் திருடிய நகைகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், செந்தில்குமார், உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருடியதும், போலீகாரர் போல் இருப்பதால் சந்தேகப்படமாட்டார்கள் என்று இதுபோன்ற துணிகர திருட்டுகளில் தொடர்ந்து ஈடுபட்டதும் தெரியவந்தது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story