நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளை கண்டறியும் பணி-சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது. அவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கணக்கெடுப்பு பணி
நாமக்கல் மாவட்டத்தில் பிறந்தது முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மாற்றுத்திறன் குறைபாடு உள்ளதா? என கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. அங்கன்வாடி பணியாளர்கள் வீடுதோறும் சென்று மாற்றுத்திறன் உள்ள குழந்தைகள் உள்ளனரா? என கண்டறிந்து, கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
உடல் ரீதியான பிரச்சினை, மன அளவிலான பிரச்சினைகள் உள்ள குழந்தைகள் குறித்தும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. தலை, முகம், கண், வாய், அன்னப்பிளவு, கழுத்து குட்டையாக இருப்பது, எலும்பு வளைந்து இருத்தல் போன்றவை குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து குறைபாடு உடைய குழந்தைகளுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு மருத்துவ ஆலோசனையும், தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறந்த சிகிச்சை மற்றும் மருத்துவ உதவியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வளைவு பாதம்
குழந்தைகளுக்கு கால் எலும்பு வளைந்து இருப்பதால், சில குழந்தைகளுக்கு கால் பாதம் சரியாக இல்லாமல் இருப்பது வளைவு பாதம் என்று அழைக்கப்படும். தாயின் வயிற்றில் வளர்கின்ற குழந்தையை சுற்றி இருக்கின்ற பனிக்குட நீரின் அளவை பொறுத்து, பிறக்கின்ற குழந்தைகளில் 1000-ல் ஒரு குழந்தைக்கு இந்த குறைபாடு வர வாய்ப்பு உள்ளது. கருப்பையில் வளர்கின்ற குழந்தையின் எலும்புகள், மூட்டுகள், தசைநார்கள் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடு இருக்கும் போது இந்த பிறவி வளைவு பாதம் ஏற்படலாம்.
இதுபோன்ற குறைபாடுகள் இருந்தால் பொது மக்கள் கணக்கெடுப்பு பணிக்கு வரும் தங்கள் பகுதி அங்கன்வாடி பணியாளர்களிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை உரிய சிறப்பு மருத்துவர்கள் மூலம் வழங்கப்படும்.
சிகிச்சை
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும், இதற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் குறைபாடுகள் கண்டறியப்படும் குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு, குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்ப பயிற்சிகளும் அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story