தடையை மீறி பேரணி சென்றவர்கள் கைது
தடையை மீறி பேரணி சென்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஒற்றுமை அணிவகுப்பு மற்றும் பேரணி பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பேரணி பொதுக்கூட்டத்திற்கு காவல்துறையின் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் அறிவித்தபடி ஒற்றுமை அணிவகுப்பு பேரணி ராமநாதபுரம் சின்னக்கடை தக்வா பள்ளிவாசல் பகுதியில் இருந்து தொடங்கியது.
மாவட்ட தலைவர் செய்யது முகம்மது இப்ராகிம் தலைமையேற்று நடத்தினார். மாவட்ட செயலாளர் ராசிக் ரகுமான் வரவேற்று பேசினார். மதுரை மண்டல தலைவர் கைசர் பேரணியை தொடங்கி வைத்தார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரகுமான், ஜகாங்கீர் அரூசி உள்பட பலர் முன்னிலை வகித்தார். தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில், மாநில தலைவர் முகம்மது சேக் அன்சாரி, அகில இந்திய பார்வர்டு பிளாக் துணை தலைவர் கதிரவன், எஸ்.டி.பி.ஐ. மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் ஏராளமானோர் கலந்து கொண்டு வந்தனர்.
இந்த பேரணியில் கலந்து கொண்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் சீருடை அணிந்து அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். மாவட்ட செயலாளர் சேக் தாவுது நன்றி கூறினார். இந்த பேரணி ராமநாதபுரம் பஸ்நிலையம் அருகில் சந்தைதிடல் பகுதியில் வந்தபோது அனுமதி மறுக்கப்பட்டதை கூறி போலீசார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் 7 திருமணமகாலில் தங்க வைக்கப்பட்டனர். தடையை மீறி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story