விடுமுறைநாளில் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்த மக்கள்
ஞாயிறு விடுமுறையையொட்டி நேற்று மக்கள் சுற்றுலாதலங்களுக்கு படையெடுத்தனர்.
திருவட்டார்:
ஞாயிறு விடுமுறையையொட்டி நேற்று மக்கள் சுற்றுலாதலங்களுக்கு படையெடுத்தனர்.
சுற்றுலா தலம்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதிலும் விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் ஞாயிறு விடுமுறையையொட்டி, சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் சூரிய உதயத்தை பார்த்த பின்னர் கடலில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். அதைத்தொடர்ந்து பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.
பயணிகள் கூட்டம்
அதைத்தொடர்ந்து அவர்கள் கடலின் நடுவே உள்ள பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்தனர்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கடற்கரையில் உலா வந்தனர். மாலையில் கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா பாதுகாவலர்கள் ஆகியோர் ரோந்து சுற்றி வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாத்தூர் தொட்டிப்பாலம்
ஆசியாவிலேயே உயரமானது என சிறப்பு பெற்றது, மாத்தூர் தொட்டிப்பாலம். நேற்று காலையில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் தொட்டி பாலத்துக்கு வந்து இயற்கை அழகை பார்த்து ரசித்தனர். தொட்டிப்பாலத்தில் நடக்கும்போது பரளியாற்றின் இரு கரைகளிலும் கண்ணுக்கெட்டியதூரம் வரை நெடிதுயர்ந்து வளர்ந்து பச்சையாக காட்சி தரும் மரங்கள் கண்களுக்கு விருந்தளித்தது.
தொட்டிப்பாலத்தின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு பாலத்தின் வழியே நடப்பது திரில்லான அனுபவம் என்பதால் ஆர்வமுடன் சுற்றுலா பயணிகள் நடந்து சென்றதை காண முடிந்தது. மேலும் மாத்தூர் தொட்டிப்பாலத்தில் உள்ள கடைகளில் கிடைத்த நுங்கு, அன்னாசி, பலாப்பழம் போன்றவற்றை வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
தொட்டிப்பாலத்தின் கீழ் பகுதியில் ஓடும் பரளியாற்றிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
குமரி மாவட்டத்தில் சுற்றுலாதலங்களில் நேற்று மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததை காண முடிந்தது.
---
Related Tags :
Next Story