நோயாளியை கட்டிலில் வைத்து 10 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச்சென்ற பொதுமக்கள்


நோயாளியை கட்டிலில் வைத்து 10 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச்சென்ற பொதுமக்கள்
x
தினத்தந்தி 13 March 2022 11:33 PM IST (Updated: 13 March 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் சாலை வசதி இல்லாததால் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க அவரை கட்டிலில் வைத்து 10 கிலோ மீட்டர் தூரம் பொதுமக்கள் தூக்கிச்சென்றனர்.

கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலையி்ல் வைலம்பாடி கிராமம் உள்ளது. இங்கு 500 குடும்பத்தினருக்கு மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மருத்துவம், சாலை, பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை.  

இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக சாலை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் மளிகை பொருட்கள் வாங்கவோ அல்லது அவசர சிகிச்சை பெற வேண்டும் என்றாலோ சுமார் 10 கிலோமீட்டர் தூரம் உள்ள அடர்ந்த வனப்பகுதி வழியாக நடந்து  மட்டப்பாறை கிராமத்துக்கு சென்று, அங்கிருந்து பஸ் மூலம் கள்ளக்குறிச்சி அல்லது கச்சிராயப்பாளையத்துக்கு சென்று வரவேண்டிய சூழல் உள்ளது. இவ்வாறு நடந்து செல்லும்போது சில சமயம் நோயாளிகளை உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

உயிரிழப்புகள்

 இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க வைலம்பாடி கிராமத்துக்கு சாலை மற்றும் பஸ் வசதி கேட்டு அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இருப்பினும் இவர்களின் கோரிக்கை இதுநாள் வரை நிரைவேற்றப்படவில்லை. இதனால் வேறு வழியின்றி கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தற்காலிகமாக சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் வைலம்பாடி கிராமத்தை சேர்ந்த ஆண்டி என்பவருக்கு  உடல் நிலை பாதிப்படைந்தது. 

இதையடுத்து அவரை சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர். ஆனால் நடந்து செல்ல அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆண்டியை ஒரு கட்டிலில் படுக்க வைத்து 10 கிலோ மீட்டர் தூரம் நடந்தே மட்டப்பாறைக்கு தூக்கிச் சென்றனர். கடும் வெயிலுக்கு இடையே ஆண்டியை கட்டிலில் வைத்து மாற்றி, மாற்றி பொதுமக்கள் தூக்கிச்சென்றனர்.

அனுமதி மறுப்பு

 பின்னர் மட்டப்பாறையில் இருந்து வாகனம் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் யாருக்கேனும் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால், அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்க்க 10 கிலோ மீட்டர் நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. நோயாளிகளை கட்டிலில் வைத்து தூக்கிச்செல்லும் போது சில நேரங்களில் எங்களது உடல் நிலையும் பாதிப்படைந்து வருகிறது.

 கல்வராயன்மலை பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதிக்காக  தமிழக அரசு பல கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இருப்பினும் சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி மறுப்பதால் சாலை பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில்போடப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் ஒவ்வொரு நாளையும் ஒரு யுகம்போல் கழித்து வருகிறோம். இந்த அவல நிலையை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Next Story