கமலாலய குளத்தின் இடிந்த தென்கரை தடுப்புசுவர் கட்டுமான பணி நிறைவு
திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தின் இடிந்த தென்கரை தடுப்புசுவர் கட்டுமான பணி நிறைவு பெற்றது.
திருவாரூர்:
திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தின் இடிந்த தென்கரை தடுப்புசுவர் கட்டுமான பணி நிறைவு பெற்றது.
கமலாலயம் குளம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலயம் குளமானது வடக்கு, தெற்கு திசைகளில் 1,060 அடியும், கிழக்கு, மேற்கு திசைகளில் 790 அடியும் அளவுகள் கொண்ட பெரிய தெப்பக்குளமாக உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி பெய்த கனமழையின் காரணமாக தென்கிழக்கு மூலையில் 101 அடி தூரத்திற்கு தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.
இதனையடுத்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க கடந்த டிசம்பர் மாதம் 23-ந் தேதி அன்று ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் இடிந்த தடுப்பு சுவர் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. இதற்காக இடிந்த கரை பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு, பைல் பவுண்டேஷன் முறையில் தூண்கள் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதற்கான பணிகளை சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தின் மூலம் தனியார் கட்டுமான நிறுவனம் மேற்கொண்டது.
சீரமைப்பு பணி துரிதமாக நடந்தது
ஆழித்தேரோட்டத்தின் போது தெற்கு வீதியில் இருந்து மேற்கு வீதிக்கு திரும்புவதற்கு முன்பு வடம் கமலாலயம் தென்கரை பகுதிக்கு செல்ல வேண்டும் என்பதால் இடிந்த கரை பகுதி சீரமைப்பு பணிகள் துரிதமாக நடந்தது. இந்நிலையில் தேரோட்டம் நாளை நடைபெறும் நிலையில் இடிந்த கரை பகுதி கட்டுமான பணிகள் முடிந்து, கம்பி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த 4 மாதங்களாக இடிந்த கரை பகுதி போக்குவரத்து தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்து வந்த நிலையில் இடிந்த பகுதி சீரமைக்கப்பட்டதால் தற்போது இந்த பாதை மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
Related Tags :
Next Story