நிதிநிறுவன அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
அரவக்குறிச்சி அருகே நிதிநிறுவன அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அரவக்குறிச்சி,
நிதி நிறுவன அதிபர்
அரவக்குறிச்சி அருகே ஆண்டிபட்டி கோட்டையை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 63), நிதிநிறுவன அதிபர். இவருடைய மனைவி லட்சுமி (57). நேற்று முன்தினம் உறவினர் இல்ல திருமணத்திற்கு கருணாநிதி சென்றுள்ளார். காய்கறிகளை வாங்குவதற்காக லட்சுமி சந்தைக்கு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.
நகை, பணம் திருட்டு
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும், பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக லட்சுமி அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிவிட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story