கண்மாயில் இறங்கி போட்டிப்போட்டு மீன்களை பிடித்த கிராம மக்கள்
மேலூர் அருகே மீன்பிடி திருவிழாவில் கண்மாயில் இறங்கி கிராம மக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
மேலூர்,
மேலூர் அருகே மீன்பிடி திருவிழாவில் கண்மாயில் இறங்கி கிராம மக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
மீன்பிடி திருவிழா
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையபட்டியில் பொன்னழகி அம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட சாவட்டான் கண்மாயில் ஆண்டுதோறும் மாசி மாதம் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மீன்பிடி திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சருகுவலையபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் நேற்று அதிகாலையிலேயே திரண்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாவட்டான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்பு கண்மாய் கரையில் நின்று பாரம்பரிய வழக்கப்படி தலையில் கட்டிய துண்டை எடுத்து கொடி போல அசைத்து அனைவரும் மீன்பிடிக்கலாம் என அனுமதி தந்தனர்.
நாட்டு வகை மீன்கள்
அதன் பிறகு அனைவரும் கண்மாய் தண்ணீரில் ஒன்றாக இறங்கி தங்கள் கையில் வைத்துள்ள மீன் கூடைகள், வலைகள், கச்சா, உள்ளிட்டவைகளை கொண்டு பல்வேறு வகையான நாட்டுவகை மீன்களை போட்டி போட்டு பிடித்தனர். அதில், கெளுத்தி, கெண்டை, கட்லா, ஜிலேபி, உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுவகை மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
ஊர் கட்டுப்பாட்டுடன் இந்த கண்மாயில் வளரும் மீன்களை யாரும் பிடிக்காமல் இருந்து மாசி மாதம் அனைவரும் ஒற்றுமையாக மீன்களை பிடிப்பது பாரம்பரிய வழக்கம் என சருகுவலையபட்டியை சேர்ந்த பூமிநாதன் தெரிவித்தார். பிடிபட்ட மீன்களை வீடுகளில் சமைத்து இறைவனுக்கு படைத்த பின்பு குடும்பத்தினருடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story