நெல் விதை பண்ணையில் அறுவடையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? அதிகாரி விளக்கம்


நெல் விதை பண்ணையில் அறுவடையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 14 March 2022 12:48 AM IST (Updated: 14 March 2022 12:48 AM IST)
t-max-icont-min-icon

நெல் விதைப்பண்ணையில் அறுவடைக்கு பின் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து குமரி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ஷீபா விளக்கி உள்ளார்.

நாகர்கோவில், 
நெல் விதைப்பண்ணையில் அறுவடைக்கு பின் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து குமரி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ஷீபா விளக்கி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விதை சான்றளிப்பு
தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையினரால் வழங்கப்படும் விதை சான்றளிப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து வயல் தரம் தேறிய விதைப்பண்ணைகள் அறுவடை செய்யும்போதும், பின்பு வயல்மட்ட விதைகளை பாதுகாப்பதிலும் பல்வேறு நடைமுறைகள் பின்பற்ற வேண்டும்.
அதாவது வயல்தரம் தேறிய விதைப்பண்ணைகளில் எந்திர அறுவடை செய்யும்போது பிற ரக கலப்பு ஏற்படுவதை தவிர்க்க அறுவடைக்கு முன்பாக எந்திரத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பின்பு எந்திரத்தில் அறுவடை செய்யப்பட்டு வரும் முதல் இரு மூடைகளை விதைக்கு தவிர்த்து விட்டு மீதமுள்ள விதைகளை, விதைக்காக எடுத்துக்கொள்வது சிறந்தது. இதன் மூலம் எந்திர அறுவடையினால் ஏற்படும் பிற ரக கலப்பு தவிர்க்கப்படுகிறது.
பூஞ்சாண வளர்ச்சி
விதை பண்ணைகளில் இருந்து அறுவடை செய்யப்படும் விதைகளை புதிய கோணிப்பைகளில் மட்டுமே சேகரிக்க வேண்டும். அறுவடை செய்யப்பட்ட வயல் மட்ட விதைகளை உடனடியாக காய வைத்து ஈரபதம் 13 சதவீதத்துக்கு கீழ் கொண்டு வரவேண்டும். இதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் நெல் விதைகளில் பூஞ்சாண வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் நெல் விதைகளின் நிறம் மாறுவதோடு முளைப்புத்திறனும் பாதிக்ககூடும். உலர் களத்தை நன்கு சுத்தம் செய்த பின்பு நெல் விதைகளை களத்தில் பரப்பி மிதமான வெயிலில் காய வைத்து அடிக்கடி கிளறி விட்டு படிப்படியாக ஈர பதத்தை குறைக்க வேண்டும்.
இதன் மூலம் நெல் விதைகளின் முளைப்புத்திறன் பாதுகாக்கலாம். நன்கு காய வைக்கப்பட்டு 13 சதவீதத்துக்கு கீழ் ஈர பதமுடைய வயல் மட்ட விதைகளை புதிய கோணி பைகளில் சேகரித்து, அதில் விதைச்சான்று எண், பயிர், ரகம், சான்றளிப்பு நிலை போன்ற விவரங்களை எழுதி சணல் கொண்டு தைத்து ஈயக்குண்டு கோர்த்து, சுத்தி அறிக்கை பெற ஸ்பெக்ஸ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விதைக்குவியல் ஆய்வு
தொடர்ந்து விதைச்சான்று அலுவலர் விதைக் குவியலை ஆய்வு செய்து முத்திரையிட்டு, அங்கீகாரம் பெற்ற விதையினை விதை சுத்தி நிலையத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவார். விதை சுத்தி நிலையத்தில் தொடர் சான்று பணி மேற்கொள்ளப்படும். மேற்கண்ட வழிமுறைகளை விதைப்பண்ணை விவசாயிகளும், விதை உற்பத்தியாளர்களும் முறையாக கடைபிடித்து தரமான விதை உற்பத்திக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story