வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 14 March 2022 1:10 AM IST (Updated: 14 March 2022 1:10 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர போராட்டத்தின் ஒரு அங்கமாக நடைபெற்ற நெல்லை எழுச்சி நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நெல்லை:
சுதந்திர போராட்டத்தின் ஒரு அங்கமாக நடைபெற்ற நெல்லை எழுச்சி நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

சுயராஜ்ய நாள்
1908-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் உள்ளிட்டோர் பங்கேற்ற சுதேசி பிரசார இயக்க கூட்டங்கள் நெல்லை, தூத்துக்குடியில் நடத்தப்பட்டன. இந்த கூட்டங்களில் பேசிய தலைவர்கள், அன்னிய நாட்டு பொருட்களை புறக்கணிக்கும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனால் சுதேசி உணர்வு மக்களிடம் தூண்டப்பட்டது.
இந்நிலையில் விபின் சந்திரபால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 1908-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதியை சுயராஜ்ய நாளாக சுதந்திர போராட்ட வீரர்கள் கொண்டாடினர்.

நெல்லை எழுச்சி நாள்
நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் தற்போது தைப்பூச மண்டபம் அமைந்துள்ள பகுதியில் தடையை மீறி இந்த விடுதலை விழா மார்ச் மாதம் 9-ந் தேதி நடந்தது. அதில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் எழுச்சி உரையாற்றினர். இதையொட்டி மார்ச் 12-ந் தேதி அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன் எதிரொலியாக நெல்லையில் ஏற்பட்ட கலவரத்தை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். அடுத்த நாள் அதாவது மார்ச் 13-ந்தேதி அன்று மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். நிைலமையை கட்டுக்குள் கொண்டுவர ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையாண்டனர். இந்த நாளை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கருப்பு நாளாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் நெல்லை மாநகராட்சியில் இந்த நாள் ‘‘நெல்லை எழுச்சி நாள்’’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரிட்டிஷ் அரசுக்கும் அனுப்பப்பட்டது.

வ.உ.சி. சிலைக்கு மரியாதை
இத்தகைய பெருமைமிகு நாளை நினைவுகூறும் வகையில் நெல்லை டவுனில் உள்ள வ.உ.சிதம்பரனார் மணி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது முழு உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் உள்ளிட்டோர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து சுதந்திர இந்தியாவின் எழுச்சியை நினைவூட்டும் வகையில் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.

கலந்து கொண்டவர்கள்
இதேபோல் ம.தி.மு.க.வினர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் கவுன்சிலர் மகேசுவரி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க நிர்வாகி நாறும்பூநாதன், எழுத்தாளர் ரெங்கா கண்ணன், பாரதியார் உலக பொதுசேவை மன்றம் கவிஞர் கணபதி சுப்பிரமணியன், முத்துசாமி உள்பட பலர் வந்து மரியாதை செலுத்தினார்கள்.

கோரிக்கை
இதுதவிர அரசியல் கட்சி பிரமுகர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் இயக்க ஆர்வலர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் நெல்லை எழுச்சி குறித்த தகவல்களை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும். இந்த நிகழ்வை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், என்று நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story