பாரம்பரிய முறைப்படி தேர் இழுக்க கிராம மக்களுக்கு அழைப்பு
திருப்பரங்குன்றம் கோவில் தேர் இழுக்க இன்றும் பாரம்பரிய மரியாதை தொடர்கிறது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் கோவில் தேர் இழுக்க இன்றும் பாரம்பரிய மரியாதை தொடர்கிறது.
பெரிய தேர்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாசல் முன்பு ஒரு பெரிய தேர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அரிச்சந்திர மகாராஜா இந்த தேரினை வழங்கியதாக செவிவழிசெய்தி கூறுகிறது. தேர் உருவாக்கப்பட்ட காலத்தில் மரத்திலான சக்கரங்கள் பொருத்தப்பட்டது. கால வளர்ச்சிக்கு ஏற்ப நாளடைவில் வலுவான இரும்பு பட்டயத்தில் பொருத்தப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேரில் புதிதாக "ஹைட்ராலிக் பிரேக்" பொருத்தப்பட்டது. இதற்கிடையே வருகின்ற ஏப்ரல் மாதத்தில் புதிய 3 டன் எடை கொண்ட உள்சக்கரம் மற்றும் அச்சு பொருத்தப்பட உள்ளது.
அரிய அற்புத சிற்பம்
சுமார் 40 டன் எடை கொண்ட இந்த தேரில் கலை நுணுக்கத்துடன் கூடிய எண்ணற்ற அழகு மிளிரும் வரலாற்று சிற்பங்கள் உள்ளன. அதில் ஒன்றாக ஆறுமுகம் கொண்ட முருகப்பெருமானின் திருக்கரத்தில் வேலுக்கு பதிலாக "தராசு" பிடித்து இருப்பது போன்று அரிய சிற்பம் இருப்பதுதான் விசேஷமாக உள்ளது. நீதி, நேர்மை, நியாயத்தின் அடையாளமாக அந்த சிற்பம் அமைந்து உள்ளது. முருகப்பெருமான் தன் திருக்கரத்தில் வேலுக்கு பதிலாக "தராசு" பிடித்து இருப்பதால் திருப்பரங்குன்றத்தை "தராசுக்காரபூமி" என்று அழைக்கிறார்கள். முருகன் கோவிலை சுற்றி 3 கி.மீ. சுற்றளவு கொண்ட கிரிவல பாதையில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழாவின் 14-வது நாள் மகா தேரோட்டம் நடைபெறும்.
தேர் இழுக்க அழைப்பு
இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழாவின் மகாதேரோட்டம் வருகின்ற 22-ந் தேதி நடக்கிறது. அரிச்சந்திர மகாராஜா காலம் தொட்டு இன்றுவரை தேர் இழுக்க கிராம மக்களுக்கு வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பு விடுவது நடைமுறையில் இருந்து வருகிறது. ஆகவே திருப்பரங்குன்றத்தை சுற்றி உள்ள கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, பெருங்குடி, பரம்புபட்டி, வலையங்குளம், கூத்தியார்குண்டு, நிலையூர், தனக்கன்குளம், பெரியஆலங்குளம், ஒத்த ஆலங்குளம், வடிவேல்கரை, நாகமலைபுதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு கோவில் முதல் ஸ்தானிரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான மு.சுவாமிநாதன் மற்றும் நாட்டாரை, வைராவி, காவல் மிராசுகள் சென்று கிராமங்களில் உள்ள கிராம நாட்டாமைகளிடம் திருவிழாக்கான மஞ்சள் நிறம் கொண்ட அழைப்பிதழ், வெற்றிலை பாக்கு ஆகியவற்றை வைத்துகோவில் தேர் இழுக்க வாருங்கள் என்று அழைப்பு விடும் பாரம்பரியம் நடைமுறை இன்றும் தொடர்வது தான் விசேஷமாகும்.
Related Tags :
Next Story