சிறப்பு புலனாய்வு குழுவினர் 2-வது நாளாக விசாரணை
சிறப்பு புலனாய்வு குழுவினர் 2-வது நாளாக விசாரணை நடத்தினர்
திருச்சி
திருச்சியை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். இவர், கடந்த 2012-ம் ஆண்டு கல்லணை சாலை திருவளர்ச்சோலை பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க முதலில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆனால், கொலையாளிகள் குறித்து எவ்வித துப்பும் துலங்கவில்லை. இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், கடந்த 2017-ம் ஆண்டு சி.பி.ஐ.-க்கு வழக்கு மாற்றப்பட்டது. அவர்கள் 4 ஆண்டுகளாக விசாரணை நடத்தியும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் நேற்று முன்தினம் திருச்சி வந்து முதல்கட்ட விசாரணையை தொடங்கினர். நேற்று 2-வது நாளாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணையை தொடர்ந்தனர். அவர்கள் தில்லைநகரில் உள்ள ராமஜெயத்தின் வீடு, அவர் நடைபயிற்சிக்கு புறப்பட்டுச் சென்ற கோட்டை ஸ்டேஷன் ரோடு, கொலை சம்பவம் நடந்த தினத்தன்று ராமஜெயம் நடைபயிற்சி மேற்கொண்ட வழிகள், கொலை செய்யப்பட்டு உடல் கண்டெடுக்கப்பட்ட திருவளர்ச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டு குறிப்பெடுத்துக் கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக அடுத்த வாரம் தமிழக போலீஸ் டி.ஜி.பி.நேரடியாக வந்து விசாரணை நடத்த உள்ளார். எனவே, ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story