‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகை மூட்டத்தால் மக்கள் அவதி
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி எதிரில் பச்சியம்மன் கோவில் பின்புறம் நகராட்சிக்கு சொந்தமான மயானம் உள்ளது. இங்கே அடிக்கடி குப்பைகள் எரிக்கப்படுவதால் புகை மூட்டம் ஏற்படுகிறது. இதன் காரணமாக தர்மபுரி- சேலம் பைபாஸ் ரோட்டில் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. இதுதொடர்பாக புகார் தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் அந்த பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
-கணேசமூர்த்தி, பாரதிபுரம், தர்மபுரி.
===
குவிந்து கிடக்கும் குப்பைகள்
சேலம் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளால் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்வோர் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், சத்திரம், சேலம்.
====
ஆபத்தான குடிநீர் தொட்டி
தர்மபுரி மாவட்டம் ஏ.கொல்லஅள்ளி காலனியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது இந்த தொட்டியில் ஆங்காங்கே விரிசல் விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் ெதாட்டி இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. தொட்டியில் ஏற்பட்டுள்ள விரிசலில் இருந்து வீணாகும் குடிநீர் அந்த பகுதியில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான இந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சத்தியராஜ், ஏ.கொல்லஅள்ளி காலனி, தர்மபுரி.
===
பஸ் வசதி வேண்டும்
நாமக்கல் மாவட்டத்தை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். எனவே ராசிபுரத்தில் இருந்து அத்தனூர், வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, காகாபாளையம் வழியாக இந்த கோவிலுக்கு சென்று பஸ் வசதி இல்லை. எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-சிங்காரம், வெண்ணந்தூர், நாமக்கல்.
===
குண்டும், குழியுமான சாலை
சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா வெள்ளையம்பாளையத்தை அடுத்துள்ள வைகுந்தம் கிராமத்திற்கு செல்லும் தார்சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. குண்டும், குழியுமான இந்த சாலை 4 ஆண்டுகளுக்கு மேலாக இதேநிலையில்தான் உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் செல்லமுடியாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
-ஜி.லோகாம்பாள், வைகுந்தம், சேலம்.
Related Tags :
Next Story