காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் ரூ.1½ கோடி தங்க நகைகள் கொள்ளை


காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் ரூ.1½ கோடி தங்க நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 14 March 2022 2:18 AM IST (Updated: 14 March 2022 2:18 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் ரூ.1½ கோடி தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற வேலைக்கார தம்பதியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்

பெங்களூரு:
பெங்களூருவில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் ரூ.1½ கோடி தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற வேலைக்கார தம்பதியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

காங்கிரஸ் பிரமுகர்

பெங்களூரு புட்டேனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிளாசிக் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். காங்கிரஸ் பிரமுகர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்திரசேகர் தனது குடும்பத்தினருடன் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் உள்ள தர்மஸ்தாலா மஞ்சுநாதா கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்று இருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் சந்திரசேகரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டு இருந்த தங்கநகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து சந்திரசேகர் பார்த்த போது பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

ரூ.1½ கோடி  நகைகள் கொள்ளை

இதுகுறித்து அவர் புட்டேனஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தினர். அப்போது 3 கிலோ தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 1.44 கோடி ஆகும். இதற்கிடையே சந்திரசேகர் வீட்டிற்கு வந்த மோப்ப நாய் சிறிது தூரம் மோப்பம் பிடித்து ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. பின்பு கைரேகை நிபுணர்கள் சந்திரசேகர் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டு அவற்றை ஆய்வுக்காக அனுப்பி வைத்து உள்ளனர்.

இதற்கிடையே சந்திரசேகர் வீட்டில் வேலை செய்த ஒரு தம்பதி திடீரென வேலையை விட்டு நின்று விட்டனர். அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால் அந்த தம்பதி நகைகளை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து உள்ளது. அந்த தம்பதியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்த புகாரின்பேரில் புட்டேனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story