வரதட்சணை கேட்டு கர்ப்பிணியை தாக்கியதில் சிசு சாவு


வரதட்சணை கேட்டு கர்ப்பிணியை தாக்கியதில் சிசு சாவு
x

வரதட்சணை கேட்டு கர்ப்பிணியை தாக்கியதில் சிசு இறந்தது.

பொன்மலைப்பட்டி
 திருச்சி கொட்டப்பட்டு ஜீவா தெரு பகுதியை சேர்ந்தவர் மேனகாதேவி (வயது 29). இவரது கணவர் திருச்சி தெப்பக்குளம் வானப்பட்டறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவிக்குமார்(30). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர். தற்போது கொட்டப்பட்டு பகுதியில் வசித்து வருகின்றனர். ரவிக்குமார் திருச்சி கோர்ட்டு அருகே முககவசம் விற்பனை செய்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது மேனகாதேவி கர்ப்பமாக உள்ளார். 
இந்தநிலையில், மேனகாதேவியிடம் கணவர் ரவிக்குமாரும், மாமியார் சத்யாவும்(47) வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது ரவிக்குமார், மேனகாதேவியை இரும்பு கம்பியால் வாய்ப்பகுதியில் தாக்கியுள்ளார். மேலும், அவரது வயிற்றில் எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இதில், காயம் அடைந்த மேனகாதேவி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் இருந்த சிசு  இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
கணவர்-மாமியார் கைது
 இதுகுறித்து மேனகாதேவி பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தன்னை தாக்கிய கணவர் மற்றும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்த மாமியார் சத்யா ஆகிேயார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜீம் விசாரணை நடத்தி ரவிக்குமார், சத்யா ஆகியோர் மீது வழக்குப் பதிந்து அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

Next Story