காமாண்டி நடும் விழா
காமாண்டி நடும் விழா நடைபெற்றது.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் காமன் பண்டிகை கொண்டாடப்படும். இதையொட்டி மாசிமாத அமாவாசை நாளில் இருந்து 3, 5, 7 என்ற நாட்களில் காமாண்டி நடுவார்கள். கரும்பு, வைக்கோல், தெப்பை புல், ஆமணக்கு செடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வைக்கோல் பிரியால் சுற்றி காமாண்டி தயார் செய்து, அதை அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞரை தூக்கி வரச்செய்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வருவார்கள். பின்னர் அந்த காமாண்டி, கிராமத்தில் உள்ள தெருக்களில் வழக்கமாக நடப்படும் இடத்தில் குழிதோண்டி நவதானியங்கள் தூவி, சிறப்பு பூஜைகள் செய்து நடப்படும். அதேபோல் இந்த ஆண்டு ஆலத்தூர் தாலுகா பகுதியில் உள்ள செட்டிக்குளம், நாட்டார்மங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் நடந்த விழாவில் காமாண்டி நடப்பட்டது. இதையடுத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் அதன் அருகில் முளைப்பாரி நாற்று விட்டு சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனர். இந்த காமாண்டிக்கு தொடர்ந்து 16 நாட்களுக்கு நாள்தோறும் இரவில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும்.இறுதி நாளன்று காமன் சுவாமிக்கு சிறப்பு வழிபாட்டுடன், தெருக்கூத்து நாடகம் நடக்கும். இதில் திருமணமாகாத ஆண்கள் மன்மதன், ரதி வேடமிட்டுக் காமாண்டி முன் நடனமாடும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் காமாண்டியை தீயிட்டு கொளுத்தி அதில் இருந்து பெறப்படும் சாம்பலை பக்தர்கள் நெற்றியில் திருநீராக இட்டு வீட்டுக்கு எடுத்துச் செல்வார்கள். திருமணமாகாதவர்கள் மன்மதன், ரதி வேடமிட்டு ஆடினால், அவர்களுக்கு உடனடியாக திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
Related Tags :
Next Story