செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளரிடம் ரூ.60 ஆயிரம் மோசடி; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளரிடம் ரூ.60 ஆயிரம் மோசடி; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 14 March 2022 2:49 AM IST (Updated: 14 March 2022 2:49 AM IST)
t-max-icont-min-icon

செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளரிடம் ரூ.60 ஆயிரம் மோசடி செய்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு
செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளரிடம் ரூ.60 ஆயிரம் மோசடி செய்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வங்கி கணக்கு முடக்கம்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஈங்கூர் மேற்கு வீதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 56). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அந்த குறுந்தகவலை பழனிசாமி பார்வையிட்டார். அதில் பான் கார்டு விவரத்தை தெரிவிக்க ஒரு லிங்க் அனுப்பப்பட்டு இருந்தது. சாதாரண குறுந்தகவல் என்று நினைத்த பழனிசாமி அந்த குறுந்தகவலை எதார்த்தமாக கிளிக் செய்து உள்ளார்.
அப்போது அவரது செல்போனுக்கு அடுத்தடுத்து 2 ஓ.டி.பி. கொண்ட குறுந்தகவல்கள் வந்தன. இதையடுத்து சிறிது நேரத்தில் பழனிசாமியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பழனிசாமி, அவரது சேமிப்பு கணக்கு வைத்துள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டார்.
மோசடி
பழனிசாமியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரம் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் பழனிசாமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரத்தை மோசடி செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதேபோல் ஈரோடு பெரியார் நகரை சேர்ந்த சுதீர்குமார் (30) என்பவரது வங்கி கணக்கிலும், பான் கார்டு விவரம் கேட்பது போல் குறுந்தகவலில் லிங்க் அனுப்பி ரூ.39 ஆயிரத்து 500 மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story