சேலம் புதிய பஸ் நிலையம் அருகே சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா கண்காட்சி தொடக்கம்-19-ந் தேதி வரை நடக்கிறது
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா கண்காட்சி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சி வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா கண்காட்சி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சி வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது.
செய்தி மக்கள் தொடர்புத்துறை
சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழாவையொட்டி "சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா" என்ற தலைப்பில் கண்காட்சி நேற்று சேலம் புதிய பஸ் நிலையம் அருகே தொடங்கப்பட்டது. இதை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ், பார்த்திபன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், அருள், உதவி கலெக்டர் ஆலின்சுனேஜா, துணை மேயர் சாரதா தேவி ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
இதில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு குறித்த புகைப்படங்கள் காட்சி படுத்தப்பட்டு உள்ளது. அதே போன்று வேளாண்மை துறையால் பாரம்பரிய நெல் கண்காட்சி மற்றும் விவசாயிகளுக்கான அரசின் வேளாண் திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்குகள், உணவு பாதுகாப்புத்துறையால் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் உணவு பொருட்கள் தரம் குறித்த விழிப்புணர்வு செயல் விளக்கங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் மூலம் பாரம்பரிய ஊட்டசத்து நிறைந்த இயற்கை உணவு தயாரிக்கும் முறைகளும் இடம்பெற்று உள்ளன.
விற்பனை கண்காட்சி
மகளிர் சுய உதவி குழுக்கள், கைத்தறி மற்றும் துணிநூல் துறைகளின் உற்பத்திப்பொருள் விற்பனை கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கூட்டுறவுத்துறை, சமூக நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை உள்ளிட்ட துறைகளால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் சாதனைகளும் இடம் பெற்று உள்ளன.
இந்த கண்காட்சி வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது. தினமும் மாலையில் கலைப்பண்பாட்டு துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
Related Tags :
Next Story