சேலத்தில் 2 பேரிடம் ரூ.3¾ லட்சம் மோசடி-போலீசார் விசாரணை


சேலத்தில் 2 பேரிடம் ரூ.3¾ லட்சம் மோசடி-போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 March 2022 3:03 AM IST (Updated: 14 March 2022 3:03 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் 2 பேரிடம் ரூ.3¾ லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:
சேலத்தில் 2 பேரிடம் ரூ.3¾ லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.1.20 லட்சம் மோசடி
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் ஜீவாநகரை சேர்ந்தவர் சாகுல்ஹமீது (வயது 24). இவரது செல்போன் எண்ணின் வாட்ஸ்-அப்பிற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்த தகவல் வந்தது. அதில், தெரிவித்துள்ள லிங்கிற்குள் சென்று விவரங்களை அவர் பதிவு செய்துள்ளார். அதன்பிறகு சாகுல்ஹமீதை தொடர்பு கொண்டு பேசிய நபர், விசா மற்றும் மருத்துவ பரிசோதனை எடுப்பதற்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் தேவை என தெரிவித்துள்ளார். இதனை நம்பிய அவர், சம்பந்தப்பட்ட நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தி உள்ளார்.
ஆனால் அதன்பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சாகுல்ஹமீது இது தொடர்பாக சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல், சேலம் பெரமனூர் நாராயண பிள்ளை தெரு நாகம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (29). கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இவரது செல்போன் எண்ணுக்கு ஆன்லைனில் முதலீடு செய்வது தொடர்பாக லிங்க் ஒன்று வந்தது. பின்னர் அதனை பதிவிறக்கம் செய்து தனது முகவரி, வங்கி கணக்கு எண் விவரங்களை பதிவு செய்துள்ளார். அதன்பிறகு அடுத்த சில நிமிடங்களில் சந்தோஷ்குமாரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 61 ஆயிரத்து 500 எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 வாலிபர்களிடம் நூதன முறையில் ரூ.3 லட்சத்து 81 ஆயிரம் மோசடி செய்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story