‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
உயர்மட்ட பாலம் வேண்டும்
அந்தியூர் அருகே உள்ள சந்தியபாளையத்துக்கும், வெள்ளையம்பாளையத்துக்கும் இடையே நீரோடை செல்கிறது. இந்த நீரோடையின் குறுக்கே தரைமட்ட பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த நீரோடையில் வரட்டுப்பள்ளம் அணையின் உபரிநீர் செல்கிறது. உபரிநீர் அதிகமாக செல்லும் இந்த பாலத்தின் வழியாக யாரும் செல்ல முடியாது. இதனால் போக்குவரத்துக்கு பாதிக்கப்படுகிறது. எனவே இந்த தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமசாமி, சந்தியபாளையம்.
குழி மூடப்படுமா?
கோபியில் இருந்து பாரியூர் செல்லும் ரோட்டில் மேட்டு வளவு பகுதி உள்ளது. அங்குள்ள ரோட்டில் வேகத்தடை உள்ள பகுதியில் குழி ஒன்று உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் குழி இருப்பது தெரியாமல் விபத்துக்குள்ளாகின்றன. எனவே இந்த குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
குவிந்து கிடக்கும் குப்பை
கோபியில் இருந்து பாரியூர் பிரிவு செல்லும் ரோட்டில் மலைபோல் குப்பை குவிந்து கிடக்கிறது. இந்த குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்கள் தங்களுடைய மூக்கை பிடித்துக்கொண்டே செல்லும் நிலை உள்ளது. அதுமட்டுமின்றி அந்த பகுதியில் சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் காற்று வீசும்போது குப்பையில் இருந்து தூசி பறந்து இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களின் கண்கள் மீது விழுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
புதர்மண்டிய பூங்கா
ஈரோடு திண்டல் மாருதி நகரில் சிறுவர் பூங்கா உள்ளது. இது சில மாதங்களாக திறக்கப்படாமல் கிடந்தது. இதனால் பராமரிப்பு இன்றி புதர் மண்டி கிடக்கிறது. இதன்காரணமாக விஷ பாம்புகள் கூடாரமாக பூங்கா திகழ்கிறது. எனவே புதர் மண்டி கிடக்கும் இந்த பூங்காவை சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் சுத்தம் செய்ய வேண்டும்.
சுரேஷ், ஈரோடு.
பழுதடைந்த ரோடு
ஊமாரெட்டியூர் கூட்டுறவு சங்கம் எதிரில் இருந்து ரோடு ஒன்று செல்கிறது. குருவரெட்டியூருக்கு செல்லும் இந்த ரோடு பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த ரோட்டில் வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. எனவே பழுதடைந்த ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தர்மலிங்கம், சுந்தராம்பாளையம்.
Related Tags :
Next Story