பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடுமுடியில் தீர்த்தக்காவடி எடுக்க குவிந்த பக்தர்கள்; கடும் போக்குவரத்து நெரிசல்


பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடுமுடியில் தீர்த்தக்காவடி எடுக்க குவிந்த பக்தர்கள்; கடும் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 14 March 2022 3:26 AM IST (Updated: 14 March 2022 3:26 AM IST)
t-max-icont-min-icon

பங்குனி உத்திரத்தையொட்டி தீர்த்தக்காவடி எடுக்க குவிந்த பக்தர்களால், கொடுமுடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடுமுடி
பங்குனி உத்திரத்தையொட்டி தீர்த்தக்காவடி எடுக்க குவிந்த பக்தர்களால், கொடுமுடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
பங்குனி உத்திரம்
கொடுமுடியில் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் தலமான மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. பங்குனி உத்திரத்தையொட்டி ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கார், வேன், பஸ் ஆகிய வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு வந்து புனித நீராடி காவடி மற்றும் தீர்த்தக்காவடி எடுத்து பழனிக்கு செல்வது வழக்கம்.  
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெறவில்லை. தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. 
போக்குவரத்து நெரிசல்
இதைத்தொடர்ந்து ஏராளமான முருக பக்தர்கள் கொடுமுடி காவிரியில் புனித நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டு, காவடி மற்றும் தீர்த்தக்காவடி எடுத்து பழனிக்கு பாதயாத்திரையாகவும், கார், வேன், பஸ் போன்ற வாகனங்கள் மூலமாகவும் சென்றுவருகிறார்கள். 
இதைெயாட்டி நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கொடுமுடி காவிரிக்கு வந்து புனிதநீராடினார்கள். இதையடுத்து சாமியை கும்பிட்டு காவடி மற்றும் தீர்த்தக்காவடி எடுத்து சென்றனர். இதற்காக ஏராளமான பக்தர்கள் இரு சக்கர வாகனம், கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் கொடுமுடியில் குவிந்தனர். இதனால் கொடுமுடி கோவிலை சுற்றி உள்ள பகுதிகளிலும், வாகனங்களை நிறுத்தும் இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இதன்காரணமாக கொடிமுடி நகரமே போக்குவரத்தால்  திக்குமுக்காடியது. 
இதைத்தொடா்ந்து கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமன் மற்றும் போலீசார் துரிதமாக செயல்பட்டு வாகன போக்குவரத்தை சரிசெய்தனர்.

Next Story