மின்கம்பத்தில் மோதிய லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்


மின்கம்பத்தில் மோதிய லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 14 March 2022 4:13 AM IST (Updated: 14 March 2022 4:13 AM IST)
t-max-icont-min-icon

மின்கம்பத்தில் மோதிய லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே கவுல்பாளையத்தில் இருந்து நேற்று மாலை கிரஷர் மண் ஏற்றிக்கொண்டு ஒரு டிப்பர் லாரி பெரம்பலூர் நோக்கி வந்தது. ஆலந்துறை அம்மன் கோவில் வழியாக துறைமங்கலம் அவ்வையார் தெரு அருகே வந்தபோது லாரி திடீரென்று சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் கம்பத்தில் இருந்த மின் விளக்கு மற்றும் வீட்டிற்கு மின்சாரம் செல்லும் வயர்கள் அறுந்து விழுந்தன. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள், மின்வாரிய ஊழியர்களிடம் கூறி உடனடியாக மின்சாரத்தை நிறுத்தினர். மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கல்குவாரி, கிரஷரில் இருந்து வந்த லாரிகள் அந்த வழியாக செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், துறைமங்கலம்-கவுல்பாளையம் சாலையில் டிப்பர் லாரிகள் அதிகளவு சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே டிப்பர் லாரிகளை இந்த பாதையில் இயக்காமல், வேறு பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது.

Next Story