வடபழனி முருகன் கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம்


வடபழனி முருகன் கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம்
x

கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம் நடைபெறும் என்ற அறிவிப்புக்கு இணங்க தற்போது திருமணம் நடத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வடபழனி முருகன் கோவிலில் மாற்றுத்திறனாளிகளான நித்யானந்தம்-வசந்தி மற்றும் அண்ணாமலை- ராதா ஆகிய ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று நடத்தி வைத்து, அதற்கான சான்றிதழை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

சட்டமன்ற மானிய கோரிக்கையின்போது கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம் நடைபெறும் என்ற அறிவிப்புக்கு இணங்க தற்போது திருமணம் நடத்தி வைக்கப்பட்டு உள்ளது.

சிதம்பரம் கோவில் குறித்து சட்டவல்லுனர்களோடு ஆலோசனை நடத்தி வருகிறோம். இணை கமிஷனர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் விசாரணை அறிக்கையை பெற்றதும் இந்த பிரச்சினை குறித்து முதல்-அமைச்சர் மேற்பார்வையில் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர் திருவிழாவில் சிறப்பான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு பார்த்துகொள்ளப்படும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு தொடங்கப்பட்ட 1 லட்சம் தல மரங்கள் நடும் பணியில் தற்போது 80 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் வடபழனி முருகன் கோவில் இணை கமிஷனர் ரேணுகா தேவி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Next Story