நகை திருட்டு போனதாக நாடகம்: தம்பதிக்கு போலீசார் எச்சரிக்கை
30 பவுன் நகை திருட்டு போனதாக நாடகம் ஆடிய தம்பதி இருவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் நிஷார் (வயது 28). இவருடைய மனைவி சல்மியா (23). இவர்கள், நேற்று முன்தினம் தங்கள் வீட்டில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் திருட்டு போனதாக வேளச்சேரி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் வெளிநபர்கள் யாரும் வீட்டுக்குள் வரவில்லை என தெரியவந்தது.
எனவே வீட்டில் உள்ளவர்கள்தான் நகையை எடுத்திருக்க வேண்டும். வழக்குப்பதிவு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என போலீசார் தெரிவித்தனர். இதனால் பயந்துபோன கணவன், மனைவி இருவரும் நேற்று போலீஸ் நிலையம் வந்து திருட்டு போனதாக கூறிய நகைகள் வீட்டின் சமையல் அறையில் இருந்து கண்டு எடுத்ததாக தெரிவித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சல்மியாவின் நகையை அவரது மாமியார் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவரிடம் நகையை கொடுக்க விரும்பாத அவர், கணவருடன் சேர்ந்து நகைகள் திருட்டு போனதாக நாடகம் ஆடியது தெரியவந்தது. கணவன், மனைவி இருவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story