வாணியம்பாடி அருகே கழிவுநீர் கால்வாய் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


வாணியம்பாடி அருகே கழிவுநீர் கால்வாய் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 March 2022 11:52 AM GMT (Updated: 14 March 2022 11:52 AM GMT)

வாணியம்பாடி அருகே கழிவுநீர் கால்வாய் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே கழிவுநீர் கால்வாய் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கழிவுநீர் கால்வாய் மூடல்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள சின்ன வேப்பம்பட்டு புதிய காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பயன்படுத்தி வந்த கழிவு நீர் கால்வாய் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியின் போது முடிவிட்டதால், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கழிவு நீர் வீடுகளுக்கு முன் தேங்கி நிற்கிறது. இதனை தினந்தோறும் எடுத்து வெளியில் ஊற்றி வருவதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை தெரிவித்து, கழிவு நீர் கால்வாய் அமைத்து தரக்கோரி வந்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பொதுமக்கள் சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் கழிவுநீர் கால்வாய் வசதி கேட்டு வாணியம்பாடி- திருப்பத்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாசில்தார் சம்பத், தாலுகா இன்ஸ்பெக்டர் பழனி முத்து தலைமையிலான போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக கால்வாய் அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டம்காரணமாக வாணியம்பாடி- திருப்பத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story