9 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம்


9 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம்
x
தினத்தந்தி 14 March 2022 5:55 PM IST (Updated: 14 March 2022 5:55 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வினியோகத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் எ.வ.வேலு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருவண்ணாமலை 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வினியோகத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

குடற்புழு மாத்திரை

திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார்.

 சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஆர்.செல்வகுமார் வரவேற்றார். பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம் திட்ட விளக்கவுரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினர்.

அதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒன்று முதல் 19 வயதுக்குட்பட்ட 7,44,077 பேருக்கும், 20 வயது முதல் 30 வயதுடைய 2,06,180 பெண்களுக்கும் என மொத்தம் 9,50,257 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

3 கோடி மாத்திரைகள்

விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

மாநில அளவில் ஒன்று முதல் 19 வயதுக்குட்பட்ட ரூ.2 கோடியே 39 லட்சம் குழந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயதுடைய 54,67,069 பெண்களும் பயனடைய உள்ளனர். 

இதற்கான ரூ.2.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 கோடி குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த பணியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 6,825 சுகாதார, அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

தமிழக அளவில் 54,439 சுகாதார, அங்கன்வாடி, ஆஷா உள்ளிட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தவுள்ளனர். 

இந்த மாத்திரைகளை சாப்பிடுவதால் குடற்புழுக்கள் முற்றிலும் நீக்கப்படும். ரத்தசோகை, ஊட்டச்சத்து, குறைபாட்டை தடுக்கிறது. எனவே அனைவரும் தயக்கமின்றி குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிடலாம்.

இவ்வாறு அவர் பேசினார். 

சுகாதார நிலையங்கள்

இதனை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், பொதுசுகாதார மற்றும் நோய்தடுப்பு மருத்துவதுறை இயக்குனர் டி.எஸ்.செல்வகுமார் கோரிக்கையை ஏற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 51 ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் சுற்றுச்சுவர் 2 ஆண்டுகளில் கட்டி தரப்படும் என்றார்.

விழாவில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமார், ஜோதி, மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகரசெயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், 

துணைத் தலைவர் பாரதி ராமஜெயம், திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன், துணைத் தலைவர் சு.ராஜாங்கம் திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, துணைத்தலைவர் த.ரமணன், மாவட்ட கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி, தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகரநல அலுவலர் ஆ.மோகன் நன்றி கூறினார்.

Next Story