திருச்சி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்ட ஜெயக்குமார்


திருச்சி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்ட ஜெயக்குமார்
x
தினத்தந்தி 14 March 2022 6:10 PM IST (Updated: 14 March 2022 6:10 PM IST)
t-max-icont-min-icon

நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திருச்சி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டார். `அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை தேவையில்லை' என பேட்டி அளித்தார்.

திருச்சி, மார்ச்.15-
நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திருச்சி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டார். `அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை தேவையில்லை' என பேட்டி அளித்தார்.
நிபந்தனை ஜாமீன்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி நடந்தது. தேர்தல் வாக்குப்பதிவின்போது, சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி தி.மு.க.வைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் 20-ந் தேதி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரை கைது செய்தனர். பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து மறியலில் ஈடுபட்டது மற்றும் நில மோசடி ஆகிய வழக்குகளில்  ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
20 நாட்களுக்கு பிறகு ஜெயக்குமாருக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதில் திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் 2 வாரங்கள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
திருச்சியில் கையெழுத்திட்டார்
அதன்படி நேற்று முன்தினம் மாலை முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் திருச்சி வந்து மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார்.
இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்திற்கு டி.ஜெயக்குமார் வந்தார். அவரை வாசலில் உள்ள பெஞ்சில் உட்கார வைத்த இன்ஸ்பெக்டர் சேரன் அங்கேயே நோட்டில் கையெழுத்து வாங்கினார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் வந்தனர்.
முன்னதாக போலீஸ் நிலைய வாசலில் புரட்சி தலைவி ஜெயலலிதா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்க என அ.தி.மு.க.வினர் கோஷம் எழுப்பினர். மேலும் பொய் வழக்கு பதிவு செய்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகவும், போலீஸ் அராஜகம் ஒழிக எனவும் கோஷம் எழுப்பப்பட்டது. அத்துடன் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். வாழ்க என்றும், அண்ணன் டி.ஜே.வாழ்க என்றும் கோஷம் எழுப்பப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீஸ் நிலைய வாசலில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு
தமிழகத்தில் விடியாத தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் அ.தி.மு.க.வினர் மீது தொடர்ந்து பொய் வழக்கு போட்டு வருகின்றனர். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கட்டிகாக்கப்பட்டு வரும் 1½ கோடி தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க.வை முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது வழக்குபோட்டு அழித்து விடலாம் என்று கங்கணம் கட்டி கொண்டு, மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் பொய் வழக்குகள்போட நினைத்தால் பூனை பகல் கனவு கண்டது போல் தான். ஒரு போதும் அது பலிக்காது. அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பது சாத்தியமில்லாதது.
வெற்றி, தோல்வி நாணயம் போன்றது
கட்சிக்கு வெற்றி, தோல்வி என்பது இருபக்க நாணயம் போன்றது தான். 2021-ம் ஆண்டு தேர்தலில் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். ஆனால் 2024-ம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும், 2026-ம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலிலும், அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-
கேள்வி: தமிழகம் முழுவதும் இரும்பு கரம் கொண்டு ரவுடிகளை அடக்குவோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளாரே?
பதில்: காமெடி நடிகர் சந்திரபாபு நினைவுதான் வருகிறது. அவர் ஒரு படத்தில் சிரிப்பு வருது.. சிரிப்பு வருது.. சின்ன மனுஷன், பெரிய மனுஷன் செயலை பார்த்து சிரிப்பு வருது. மேடை ஏறி பேசும்போது ஆறுபோல பேச்சு. கீழே இறங்கி வரும்போது சொன்னதெல்லாம் போச்சு என பாடியிருப்பார். இது ஊருக்குத்தான் உபதேசம். மு.க.ஸ்டாலினே சொல்லி இருக்கிறார். தனது கட்சி எப்படிப்பட்டது என்று. அது தொண்டர்களை கொண்ட கட்சி அல்ல. குண்டர்களை கொண்ட கட்சி. பல வழக்குகளை கொண்ட சமூக விரோதியை தனது கட்சிக்காரன் என்று சொல்கிறார். அதுபோன்ற அடிப்படை தகுதி உள்ளவர்கள்தான் அங்கு உள்ளனர்.
வெற்றியை நோக்கி அ.தி.மு.க. பயணிக்கும்
கேள்வி: அ.தி.மு.க.வில் ஒரு வலுவான ஒற்றை தலைமை இல்லாததினால் தான் வழக்கு போடுவதாக கூறப்படுகிறதே?
பதில்: அப்படி யார் சொன்னது. அது தவறான கருத்து. 1996-ல் அ.தி.மு.க.விற்கு அசைக்க முடியாத தலைமை இருந்தது. அப்போதும் தி.மு.க. அரசு பொய் வழக்கு போட்டது. இப்போதும் பொய் வழக்கு போடுகிறார்கள். அ.தி.மு.க.வை தற்போது ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆகிய இருபெரும் தலைவர்களும் சிறப்பாக வழிநடத்துகிறார்கள். ஒற்றை தலைமை தேவையில்லை.  அ.தி.மு.க தலைமைக்கும் பொய் வழக்கு போடுவதற்கும் சம்பந்தமில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இருபெரும் தலைவர்களின் நல்லாசி இருக்கிறது. மாபெரும் வெற்றி சின்னமான இரட்டை இலை இருக்கிறது. இவையெல்லாம் அ.தி.மு.க.விற்கு ஒரு மேஜிக். நூறாண்டுகளுக்கும் மேலாக அ.தி.மு.க. தழைக்கும், வளரும், ஓங்கும். ஆலமரம்போல நிழல்தரும். இனி வெற்றியை நோக்கியே அ.தி.மு.க. பயணிக்கும்.
கேள்வி: கட்சி தலைமைக்கு எதிராக தொடர்ந்து போஸ்டர் ஒட்டும் கலாசாரம் நடந்து வருகிறதே?
பதில்: அ.தி.மு.க.வில் கட்சி கட்டுப்பாட்டை யார் மீறினாலும் அது தவறு தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ராஜா கூட அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் அவர் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு சென்றார். அங்கு அவரை மாவட்ட செயலாளர்கள் பரஞ்ஜோதி (புறநகர் வடக்கு), ப.குமார் (புறநகர் தெற்கு), மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.


Next Story