தூத்துக்குடி விமான நிலையத்தில் இயக்குனர் கவுதமன் ‘திடீர்’ கைது
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குறிஞ்சாக்குளம் கோவில் விவகாரத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் இயக்குனர் கவுதமனை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
குறிஞ்சாக்குளம் கோவில் விவகாரத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் இயக்குனர் கவுதமனை போலீசார் கைது செய்தனர். மேலும், தடையை மீறிய 21 பேரும் கைது செய்யப்பட்டார்கள்.
144 தடை உத்தரவு
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள குறிஞ்சாக்குளம் கிராமத்தில் காந்தாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக பல ஆண்டுகளுக்கு முன்பு இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையொட்டி நடந்த தகராறில் 4 பேர் உயிரிழந்தனர்.
இதன்பின்னரும் குறிஞ்சாக்குளம் கிராமத்தில் விழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கடந்த 5-ந் தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.
இயக்குனர் கவுதமன் கைது
இந்தநிலையில் ஒரு பிரிவினர் குறிஞ்சாக்குளம் கிராமத்தில் காந்தாரி அம்மன் கோவில் பகுதியில் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், திரைப்பட இயக்குனருமான கவுதமன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி அருகே வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது தடை உத்தரவை மீறி குறிஞ்சாக்குளத்துக்கு செல்ல முயன்றதாக இயக்குனர் கவுதமனை புதுக்கோட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
உரிமை பெறாமல் ஓயமாட்டேன்
அப்போது இயக்குனர் கவுதமன் நிருபர்களிடம் கூறுகையில், “குறிஞ்சாக்குளத்தில் காந்தாரி அம்மன் சிலையை நிறுவி வழிபாடு செய்யக்கூடாது என்று, எங்களது உரிமையை தடுக்கின்ற வகையில் 144 தடை சட்டம் போட்டு இருப்பது கண்டனத்துக்குரியது. எங்களுக்கு தமிழினத்தின் வழிபாட்டு உரிமை வேண்டும். அதை தடுத்து நிறுத்தினால் நாங்கள் போராடுவோம். ஒட்டுமொத்த தமிழர்களையும் சேர்த்து ஜல்லிக்கட்டை தாண்டிய ஒரு போராட்டத்தை போல் நடத்தியாவது நான் அந்த உரிமை பெறாமல் ஓயமாட்டேன்” என்றார்.
21 பேர் கைது
இதற்கிடையே, கழுகுமலை அருகே உள்ள எச்சிலாபுரத்தைச் சேர்ந்த மள்ளர் மீட்பு கழகத்தினர் செந்தில்மள்ளர் தலைமையில் ஒரு பிரிவினர் தடையை மீறி குறிஞ்சாக்குளம் செல்ல முயன்றனர். இதுபற்றி கழுகுமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், தடையை மீறி கோவிலுக்கு செல்ல முயற்சி செய்ததாக மள்ளர் மீட்பு கழகத்தை சேர்ந்த செந்தில் மற்றும் நிர்வாகிகள் உள்பட 21 பேரை கழுகுமலையில் போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
இதைத்தொடர்ந்து கழுகுமலை, திருவேங்கடம், குறிஞ்சாக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story