நெசவுத்தொழிலாளிகளிடம் ரூ.60 லட்சம் மோசடி
நெசவுத்தொழிலாளிகளிடம் ரூ.60 லட்சம் மோசடி தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
ராமநாதபுரம்,
பரமக்குடி எமனேசுவரம் பகுதியை சேர்ந்த ஏராளமான நெசவுத்தொழிலாளிகள் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- சென்னை மயிலாப்பூர் பல்லாக்கு மாநகர் பகுதியை சேர்ந்த கனகசபை மகன் கமலக்கண்ணன் என்பவர் எங்களிடம் வந்து தனியார் நிதிநிறுவனம் ஒன்றில் முதலீடு செய்யும் தொகைக்கு 10 சதவீதம் வட்டி தருவதாக கூறினார். வட்டி தொகையை மாதாமாதம் வங்கி கணக்கில் செலுத்தி விடுவதாக தெரிவித்தார். இவ்வாறு ஆசைவார்த்தை கூறி 26 பேரிடம் ரூ.60 லட்சத்து 60 ஆயிரம் பெற்றுள்ளார்.
இதேபோன்று பல பகுதிகளில் ரூ.10 கோடி வரை முதலீடுகளைப் பெற்று 6 மாதம் வரை வட்டி கொடுத்து அதன்பின்னர் எதுவும் வழங்கவில்லை. இதுகுறித்து நாங்கள் முதலீடு தொகையை தருமாறு கோரினோம். தருவதாக கூறியவர் தற்போது எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதனால் நாங்கள் அனைவரும் முதலீடு செய்த தொகையை இழந்து தவிக்கிறோம். எனவே, கமலக்கண்ணன் மீது நடவடிக்கை எடுத்து எங்களின் முதலீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
Related Tags :
Next Story