காட்பாடியில் ரூ.19 கோடியில் மாவட்ட விளையாட்டு மைதானம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்


காட்பாடியில் ரூ.19 கோடியில் மாவட்ட விளையாட்டு மைதானம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 14 March 2022 7:27 PM IST (Updated: 14 March 2022 7:27 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடியில் 36.68 ஏக்கரில் ரூ.19 கோடியே 24 லட்சத்தில் கட்டப்பட்ட மாவட்ட விளையாட்டு மைதானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

வேலூர்

காட்பாடியில் 36.68 ஏக்கரில் ரூ.19 கோடியே 24 லட்சத்தில் கட்டப்பட்ட மாவட்ட விளையாட்டு மைதானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மாவட்ட விளையாட்டு மைதானம்

வேலூர் இன்பென்டரி சாலையில் உள்ள நேதாஜி விளையாட்டு அரங்கம் வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானமாக செயல்பட்டு வந்தது. தற்போது அந்த மைதானம் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஆயுதப்படை மைதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே விளையாட்டு வீரர்கள் மாவட்ட அளவிலான விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் காட்பாடியில் உள்ள முன்னாள் ராணுவவீரர்கள் கேண்டீன் அருகே 36.68 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டு, ரூ.19 கோடியே 24 லட்சத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

இந்த விளையாட்டு மைதானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

 அதைத்தொடர்ந்து விளையாட்டு மைதானத்தில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் குத்துவிளக்கேற்றினார். பின்னர் அவர் விளையாட்டு வீரர்களின் ஓட்ட பயிற்சியை கொடியசைத்தும், கைப்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி தொடங்கி வைத்து விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டார்.

இதில், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், உதவிகலெக்டர் ஐஸ்வர்யா (பயிற்சி), வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், பொதுப்பணித்துறை அலுவலர்கள், கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பார்வையாளர்கள் மாடம்

விளையாட்டு மைதானத்தில் 1,500 பேர் அமரக்கூடிய மேற்கூரையுடன் கூடிய பார்வையாளர்கள் மாடமும், தரைத்தளத்தில் விளையாட்டு அலுவலர் அலுவலகம், உடற்பயிற்சி அறை, ஆண்கள், பெண்கள் தங்கும் அறைகள், சமையல் அறை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், கழிவறை வசதிகளும் உள்ளன.

400 மீட்டர் தடகள பாதை, கூடைப்பந்து, கால்பந்து, கையுந்து பந்து, ஆக்கி, இறகுப்பந்து, கோ-கோ மைதானம், நீச்சல் குளம் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்திலும் விளையாட்டு நடத்தும் வகையில் உயர்கோபுர மின்விளக்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

Next Story