போலீஸ் பணிக்கு தேர்வான 198 பேருக்கு பயிற்சி
திண்டுக்கல் சீலப்பாடி மைதானத்தில் போலீஸ் பணிக்கு தேர்வான 198 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
திண்டுக்கல்:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2-ம் நிலை போலீஸ்காரர், சிறை காவலர், தீயணைப்பு வீரர்களுக்கு தேர்வு நடைபெற்றது. இதில் எழுத்து தேர்வு, உடல்தகுதி திறன் தேர்வு ஆகியவை மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 198 பேர் போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார்.
மேலும் பயிற்சிக்கு முதல் நபராக சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ரூ.500 வெகுமதி வழங்கினார். அதேபோல் பயிற்சிக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கினார். அதோடு போலீஸ் பயிற்சி காலத்தில் அனைவரும் சிறப்பாக பயிற்சி பெற வேண்டும். மேலும் பயிற்சி காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இதில் ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story