மக்கள் கலெக்டரிடம் மனு


மக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 14 March 2022 7:31 PM IST (Updated: 14 March 2022 7:31 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் கலெக்டரிடம் மனு

திருப்பூர், 
ஊத்துக்குளி அருகே வீடுகளுக்குள் பூச்சிகள், வண்டுகள் படையெடுப்பதால் உணவு பொருட்களை கூட சாப்பிட முடியாமல் அவதிப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.
பூச்சிகள் படையெடுப்பு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் வினீத் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். பொதுமக்கள் அளித்த மனுக்கள் விவரம் வருமாறு:-
ஊத்துக்குளி தாலுகா கஸ்தூரிபாளையம் செட்டித்தோட்டம் அண்ணமார் நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘தென்முகம் காங்கேயம்பாளையம் கிராமத்தில் அரசு சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. இங்கு 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் குடியிருப்புக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான நெல் குடோன் உள்ளது. அந்த குடோனில் நெல்மூடைகள் இருப்பு வைக்கப்படுவதால் அங்கிருந்து பூச்சிகள், சிறிய வண்டுகள் அதிக அளவில் உற்பத்தியாகி எங்கள் குடியிருப்புக்கு படையெடுகின்றன.
நாங்கள் சாப்பிடும் உணவு பொருட்களில் விழுகிறது. வீடு முழுவதும் சிறிய, சிறிய வண்டுகள் ஊர்ந்து செல்கின்றன. குழந்தைகளுக்கு தலையில் வந்து விழுவதால் அரிப்பு ஏற்பட்டு தொந்தரவாக உள்ளது.  பூச்சி, வண்டு தொந்தரவில் இருந்து எங்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
ஆதிதிராவிட மக்களுக்கு நிலம்
பொல்லிகாளிபாளையம், அமராவதிபாளையம், ஓம் நமோ நாராயணநகர் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. செல்போன் கோபுரம் குடியிருப்பு பகுதியில் அமைத்தால் கதீர்வீச்சால் பாதிப்பு ஏற்படும் என்றுஅஞ்சுகிறோம். எனவே செல்போன் கோபுரத்தை அனுமதிக்கக்கூடாது’ என்று கூறியுள்ளனர்.
பல்லடம் பருவாய் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் வந்து அளித்த மனுவில், ‘கடந்த 2001-ம் ஆண்டு நிலச்சீர்த்திருத்த அடிப்படையில் 45 பேருக்கு விவசாய நிலமாக தலா 50 சென்ட் வீதம் 22 ஏக்கர் 82 சென்ட் வழங்கி அரசாணையிடப்பட்டது. ஆனால் பயனாளிகளுக்கு நிலத்தை அளவீடு செய்து கொடுக்கவில்லை. எனவே  45 பேருக்கும் நிலத்தை அளவீடு செய்து வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
மினிபஸ் வேண்டும்
சீர்மரபினர் நல சங்கத்தினர் அளித்த மனுவில், ‘தமிழகத்தின் வீர பூர்வகுடி 68 சமூக மக்களுக்கு டி.என்.டி., டி.என்.சி. இரட்டை சான்றிதழ் முறையை ஒழித்து ஒரே டி.என்.டி. சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
பல்லடம் தாலுகா பணிக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘பாலசமுத்திரம், சீனிவாசா நகர், அம்மன் நகர், கொசவம்பாளையம், பணிக்கம்பட்டி, வேலப்பகவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் 1,650-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கொரோனா காலத்துக்கு முன் மினி பஸ் ஒன்று பல்லடத்தில் இருந்து கொசவம்பாளையம் வழியாக பணிக்கம்பட்டி வரை இயக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு அந்த பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ் போக்குவரத்து வசதி இல்லாமல் மக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே மினி பஸ் இயக்க அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
குளத்தில் மண் அள்ளி சென்றனர்
திருப்பூர் 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘வக்பு போர்டு நிலத்தில் பள்ளிவாசல் உள்ளது. அதில் கட்டுமானம் அனுமதி பெற வேண்டியும், தடையின்மை சான்று வழங்க வேண்டியும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் இருவரும் கட்டுமான அனுமதி, தடையின்மை சான்று 4 வாரத்துக்குள் சட்டத்துக்கு உட்பட்டு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதுகுறித்து சட்டத்துக்கு உட்பட்டு உத்தரவு பிறப்பித்து பள்ளிவாசலில் தொழுகைக்கும், இடையூறு இல்லாமல் செயல்பட உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
சாமளாபுரம் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘பள்ளபாளையம் குளம் பொது நல அமைப்பு மற்றும் பொதுமக்கள் மூலமாக தூர்வாரப்பட்டது. இந்தநிலையில் அந்த குளத்தின் அருகே முறைகேடாக சிலர் மண் அள்ளி சென்று விட்டனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

Next Story