திண்டுக்கல் மாவட்டத்துக்கு நவீன வசதிகளுடன் கூடிய 4 ஆம்புலன்ஸ்
திண்டுக்கல் மாவட்டத்துக்கு நவீன வசதிகளுடன் கூடிய 4 ஆம்புலன்ஸ்களின் சேவையை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல்:
ஆம்புலன்ஸ் சேவை
விபத்து, திடீர் உடல்நலக்குறைவு, மகப்பேறு ஆகியவற்றுக்கு சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பது அவசியம். அதுவும் முதல்கட்ட சிகிச்சை அளித்தபடி மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் உயிரிழப்பை தவிர்க்க முடியும். இதற்காகவே 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு, மாவட்டந்தோறும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே 34 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் பச்சிளம் குழந்தைகளுக்காக மட்டும் 2 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆம்புலன்சும் இயக்கப்படுகிறது. இதற்கிடையே நவீன சிகிச்சை கருவிகளுடன் கூடிய மேலும் 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
இதன் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, திண்டுக்கல் பழைய நீதிமன்றம் முன்பு நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு கொடியசைத்து 4 ஆம்புலன்ஸ்களின் சேவையை தொடங்கி வைத்தார்.
இந்த 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ரெட்டியார்சத்திரம், சாலையூர், பாப்பன்பட்டி, சிலுவத்தூர் ஆகிய 4 ஊர்களில் இருந்து இயக்கப்பட உள்ளன. இதன்மூலம் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் மேயர் இளமதி, பழனி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார், நலப்பணிகள் இணை இயக்குனர் பாக்கியலட்சுமி, மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன், கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story