சுரங்கப்பாதையில் கீறல்களை சரிசெய்யும் பணி மும்முரம்


சுரங்கப்பாதையில் கீறல்களை சரிசெய்யும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 14 March 2022 8:13 PM IST (Updated: 14 March 2022 8:13 PM IST)
t-max-icont-min-icon

பாம்பன் ரோடு பாலம் சுரங்கப்பாதையில் கீறல்களை சரிசெய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

ராமேசுவரம், 
பாம்பன் ரோடு பாலம் சுரங்கப்பாதையில் கீறல்களை சரிசெய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
நிதி ஒதுக்கீடு
மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. கடந்த 32 ஆண்டுகளை கடந்து ரோடு பாலத்தில் போக்குவரத்து சிறப்பாக நடந்து வருகிறது. இதனிடையே பாம்பன் பாலத்தில் உள்ள பல தூண்களில் லேசான கீறல் மற்றும் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. 
தொடர்ந்து பாம்பன் ரோடு பாலம் சீரமைப்பு பணிக்காக அரசு ரூ. 16 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து பாம்பன் ரோடு பாலத்தின் சீரமைப்பு பணியானது கடந்த டிசம்பர் மாத இறுதியில் தொடங்கியது. இந்த சீரமைப்பு பணிகளில் முதல் கட்டமாக பாலத்தின் அடிப்பகுதியில் கடலில் அமைந்துள்ள சேதமடைந்த தூண் களில் கீறலை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. 
சீரமைப்பு
அதிலும் தற்போது பாம்பன் ரோடு பாலத்தின் மையப் ்பகுதயில் உள்ள பாதை வழியாக சென்று சாலைக்கும் தூண்களுக்கும் இடையே உள்ள சுரங்கப் பாதைகளில் உள்ள கீறல்களை சரி செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பாம்பன் ரோடு பாலத்தின் சீரமைப்பு பணியில் 30-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி தேசிய நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- பாம்பன் பாலத்தின் சீரமைப்பு பணிக்காக அரசு ரூ.16 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இந்த சீரமைப்பு பணியானது கடந்த டிசம்பர் மாதம் முதல் தொடங்கியது. மும்பையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் மூலம் இந்த சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.
 கலவை
கடலுக்குள் 78 தூண்களையும், கான்கிரீட் கற்களால் செய்யப்பட்ட 79 கர்டர் களையும் தாங்கி நிற்கிறது இந்த ரோடு பாலம். முதல்கட்டமாக இந்த சீரமைப்பு பணியில் ரோடு பாலத்தின் அடியில் உள்ள அனைத்து தூண்களிலும் உள்ள வர்ணங்கள் ஏர் கம்ப்ரசர் மூலம் அகற்றப்பட்டு சேத மான இடங்களில் ரசாயனம் கலந்த சிெமண்டு கலவைகள் மூலம் கீறல்களை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
2-வது கட்டமாக பாம்பன் ரோடு பாலத்தில் மைய பகுதி பாதை வழியாக சென்று சாலைக்கும் தூணுக்கும் இடையே சுரங்கப்பாதை சுவர்களில் உள்ள உப்பு படிவம், தூசிகள் அனைத்தும் ஏர் கம்பரசர் மூலம் அகற்றி சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. 
இந்த சுரங்கப் பாதையின் சுவர்களில் முழுமையாக சுத்தம் செய்யும் பணிகள் முடிந்த பின்னர் உள் பகுதியில் லேசான வெள்ளை நேரத்தில் புதிய வர்ணம் அடிக்கப்பட உள்ளது. அதன் பின்னர் கடலில் இருந்து சாலையின் மையப் பகுதி வரையிலும் உள்ள உயரம் கொண்ட தூண்களில் உள்ள கீறல்கள் மற்றும் சேதமான அனைத்து இடங்களிலும் ஏர் கம்ப்ரசர் மூலம் சுத்தம் செய்து அகற்றப்பட்டு ரசாயனம் கலந்த கலவை மூலம் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது.
புதிய வர்ணம்
அனைத்து தூண்கள் மற்றும் கான்கிரீட் கர்டர்களிலும் முழுமையாக கீறல்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னர் இறுதியில் புதிய வர்ணம் அடிக்கப்பட உள்ளது. ரோடு பாலத்தின் சீரமைப்பு பணியை இன்னும் 10 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிந்த பின்னர் பாம்பன் ரோடு பாலத்தில் 4 விதமான வர்ணங்கள் அடிக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 
பாம்பன் ரோடு பாலத்தின் சுரங்க பாதைகளில் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால் அதற்கு தேவையான இரும்பு கம்பி உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் தொழிலாளர்கள் செல்வதற்காக நேற்று பாம்பன் ரோடு பாலத்தின் மையப்பகுதியில் உள்ள வட்டவடிவிலான இரும்பு மூடி திறக்கப்பட்டு அதன் வழியாக உபகரணங்கள் கொண்டு சென்றதையும் தொழிலாளர்கள் சென்று வந்ததையும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆச்சரியத்தோடு நின்று வேடிக்கை பார்த்தனர்.

Next Story