பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரசை மையமாக வைத்து ஒரு அணி உருவாக வேண்டும்
பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரசை மையமாக வைத்து ஒரு அணி உருவாக வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
காரைக்குடி,
பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரசை மையமாக வைத்து ஒரு அணி உருவாக வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
பேட்டி
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒவ்வொரு தேர்தலும் ஒரு அரசியல் இலக்கணத்தின் அடிப்படையில் தான் நடைபெறும். நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலின் முடிவு 2024 நாடாளுமன்ற தேர்தலில் தொடரும் என்று கூறமுடியாது. 2024 தேர்தலுக்கு அதிகமான கால அவகாசம் உள்ளது. அதற்குள் எத்தனையோ மாற்றங்களை சந்திக்க வேண்டியது இருக்கும். பல ஒருங்கிணைப்புகள் வரலாம். அரசியல் மாற்றங்கள் நிகழலாம்.
ஒவ்வொரு தேர்தல் முடிந்ததும் அதன் முடிவுகள் பல பாடங்களை கற்றுக்கொடுக்கும். இந்த தேர்தல் பாரதிய ஜனதாவிற்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு எந்த மாநிலத்திலும் 50 சதவீத வாக்குகள் கிடைக்கவில்லை. பா.ஜ.க. விற்கு எதிரானவர்கள் பல பிரிவுகளாக பிரிந்து தேர்தலை சந்தித்ததால் பா.ஜ.க. வால் வெற்றி பெற முடிந்தது என்பது தெளிவாக தெரிகிறது.
துணை அமைப்புகள்
பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரசை மையமாக வைத்து ஒரு அணி உருவாகி தேர்தலை சந்தித்தால் நிச்சயமாக பா.ஜ.க.வை தோற்கடிக்க முடியும் என்ற உண்மையை இந்த தேர்தல் மேலும் தெளிவாக உணர்த்துகிறது. தேர்தலுக்குப் பின் தலைவர் பதவி குறித்து விவாதங்களை பிரதானமாக்க கூடாது. அதனை நான் ஏற்றுக்கொள்வ தில்லை. கட்சியின் அடிப்படை உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது போன்ற பல்வேறு செயல்களை செய்ய வேண்டும். பாரதிய ஜனதா கட்சிக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு துணை அமைப்புக்கள் உள்ளன. அவைகள் தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாமல் எப்பொழுதும் இந்துத்துவா கொள்கையை முன்வைத்து மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகின்றன.
செல்வாக்கு
அதுபோன்று காங்கிரஸ் கட்சியில் துணை அமைப்புகள் கிடையாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பா.ஜ.க. மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத கட்சியாகவே உள்ளது. இங்கு மதச்சார்பற்ற கட்சிகளுக்குத்தான் செல்வாக்கு உள்ளது. இவ்வாறு கூறினார். பேட்டியின்போது மாங்குடி எம்.எல்.ஏ., நகர் காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story