பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 14 March 2022 9:56 PM IST (Updated: 14 March 2022 9:56 PM IST)
t-max-icont-min-icon

தேனி முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வில் முறைகேடு நடந்ததாக கூறி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி:
உள்ளிருப்பு போராட்டம்
தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் பங்கேற்க நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்திருந்தனர். கலந்தாய்வு காலையில் தொடங்கி நடந்தது.
மாலை 3 மணியளவில் நடந்த கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள், கலந்தாய்வில் முறைகேடு நடப்பதாக கூறி வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலக வளாகத்திலேயே தரையில் அமர்ந்தனர். 
முறைகேடு
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறுகையில், "கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாமரைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, சிலமலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பணி நிரவல் முறையாக செய்யப்படவில்லை. இந்த பள்ளிகளில் பணி நிரவல் விதிகள் மீறப்பட்டு முறைகேடு நடந்துள்ளது. 

பணி நிரவலின் போது கூடுதல் எண்ணிக்கையில் இருக்கும் ஆசிரியர்கள், குறைவான எண்ணிக்கையில் இருக்கும் பள்ளிக்கு மாற்றப்படுவார்கள். ஆனால், சிலமலையில் ஏற்கனவே கூடுதலான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் அங்கு ஒரு ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட்டார். தற்போது ஏற்கனவே பணியாற்றி வரும் ஆசிரியரை பணி நிரவல் என்று வேறு இடத்துக்கு மாற்ற முயற்சித்தனர். அதுபோல் மற்ற இரு பள்ளிகளிலும் பணி நிரவல் செய்வதில் முறைகேடு நடப்பதாக கூறி கலந்தாய்வை புறக்கணித்து போராட்டம் நடத்துகிறோம்" என்றனர்.

அவர்களிடம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் பேச்சுவார்த்தை நடத்தினார். பணி நிரவலின் போது கவனக்குறைவால் சில தவறுகள் நடந்து இருந்தால் அது சரி செய்யப்படும் என்றும், இதுகுறித்து மனு கொடுத்தால் அதன்பேரிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் நடந்த போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் தொடர்ந்து கலந்தாய்வு நடந்தது. இதனால், முதன்மை கல்வி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story