சுருக்கெழுத்து தேர்வில் குளறுபடி


சுருக்கெழுத்து தேர்வில் குளறுபடி
x
தினத்தந்தி 14 March 2022 10:04 PM IST (Updated: 14 March 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சுருக்கெழுத்து தேர்வில் குளறுபடி நடந்திருப்பதாக மாணவ-மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

நாகப்பட்டினம்:
 நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சுருக்கெழுத்து தேர்வில் குளறுபடி நடந்திருப்பதாக மாணவ-மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
 நாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் மனு அளித்து சென்றனர்.
நாகை அரசு ஐ.டி.ஐ.யில் படித்த மாணவ, மாணவிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் நாகையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கடந்த 2020- 2021-ம் கல்வி ஆண்டில் ஆங்கில சுருக்கெழுத்தர் பிரிவில் படித்து வந்தோம்.
சுருக்கெழுத்து தேர்வு ஆன்லைன் மூலம் கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடந்தது. தேர்வு எழுதும் போது இணையதள பிரச்சினையால் மிகவும் கஷ்டப்பட்டு நீண்ட நேரம் தேர்வு எழுதினோம். அப்போது இணையதள பிரச்சினை இருப்பதால் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு தரப்படும் என தேர்வு துறையால் அறிவிக்கப்பட்டது.
13 பேர் தேர்ச்சி
இந்த நிலையில் தேர்வு எழுதி முடிவுகள் வந்த போது தேர்வில் கலந்து கொண்ட 49 பேரில் 13 பேர் மட்டும் தேர்ச்சி என்றும், மீதமுள்ளவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை (ஆப்சென்ட்) என அறிவிக்கப்பட்டது. இது குறித்து நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கேட்ட போது பிப்ரவரி மாதம் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு தரப்படும். அதற்கான நுழைவுசீட்டு வந்தவுடன் அனைத்து மாணவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவித்தனர். இதை நம்பி நாங்கள் அங்கிருந்து சென்று விட்டோம்.
பிப்ரவரி மாதம் தேர்வு நுழைவு சீட்டு வெளியிடப்பட்டது. ஆனால் நுழைவு சீட்டு வெளியிடப்பட்டது குறித்து தொழிற்பயிற்சி நிலையம் எங்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. சந்தேகம் அடைந்து இன்று (அதாவது நேற்று) தொழிற்பயிற்சி நிலையத்துக்கு வந்து கேட்ட போது மறு தேர்வு முடிந்து விட்டது. நுழைவு சீட்டுகளை நீங்கள் தான் ஆன்லைன் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். ரெகுலர் மாணவர்களுக்கு தான் எங்களால் தேர்வு குறித்த தகவல் தெரிவிக்க முடியும் என்று பதில் கூறி அனுப்பி விட்டனர். தேர்வு எழுதியும் இணையதள பிரச்சினையால் ஆப்சென்ட் வந்துள்ளது.
தீர்வு காண வேண்டும்
 மீண்டும் நடத்தப்பட்ட மறு தேர்வு குறித்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மீண்டும் தேர்வு ஒரு ஆண்டு கழித்த பின்னர் தான் நடக்கும். தேர்வுதுறை குளறுபடியால் எங்களது எதிர்காலம் ஒரு ஆண்டு பாதிக்கப்படுகிறது. இந்த முறை தேர்வு எழுதி தேர்ச்சி சான்றிதழ் கிடைத்தால் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெற முடியும். நிர்வாகம் செய்த குளறுபடியால் எங்களது எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது.
 எனவே இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்

Next Story